தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் கடத்திய தட்சிணாமூர்த்திக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

2 mins read
cd3aef9f-c5ab-4adb-9ebb-bc0aa04c165e
தட்சிணாமூர்த்தி காத்தையா 2011ல் கைதுசெய்யப்பட்டார். - படம்: விக்கிபீடியா

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட மலேசியரான 39 வயது தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 25) சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த மரண தண்டனை, பின்னர் நிறைவேற்றப்பட்டதாக மலேசிய ஊடகமான நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

தட்சிணாமூர்த்திக்கு ‘காலையில் தண்டனை நிறைவேற்றப்படாது’ என்று அவரது குடும்பத்திற்கு சாங்கி சிறைச்சாலை நள்ளிரவு 12 மணியளவில் தெரியப்படுத்தியதாக தட்சிணாமூர்த்தியின் வழக்கறிஞர் என்.சுரேந்திரன் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

பின்னர், பிற்பகல் 3 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மலாய் மெயில் ஊடகம் தெரிவித்தது.

தட்சிணாமூர்த்தி 2011ல் கைதுசெய்யப்பட்டார்.

அவருக்கு முதலில் 2022ல் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. ஆனால், சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வந்ததால், தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தட்சிணாமூர்த்தியிடம் குறைந்தது 44.96 கிராம் ‘டையமொர்ஃபின்’ அல்லது கலப்படமில்லாத ‘ஹெராயின்’ இருந்தது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தது.

சிங்கப்பூரின் போதைப்பொருள் தவறான பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ், 15 கிராமுக்குமேல் ‘டையமொர்ஃபின்’ கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதன் அறிக்கையில் கூறியது.

“44.96 கிராம் டையமொர்ஃபின், ஏறக்குறைய 540 போதைப் புழங்கிகள் ஒரு வாரம் உட்கொள்வதற்குப் போதுமானது,” என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேலும் கூறியது.

குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட தட்சிணாமூர்த்திக்கு 2015 ஏப்ரல் 15ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், 2016 பிப்ரவரி 5ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது.

வழக்கு விசாரணை, மேல்முறையீடு இரண்டிலும் தட்சிணாமூர்த்தியை அவருடைய வழக்கறிஞர்கள் பிரதிநிதித்ததாகவும் சட்டபூர்வ அனைத்துச் செயல்முறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.

தட்சிணாமூர்த்தியின் மரண தண்டனை குறித்து அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்