எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஒன்றில் புதன்கிழமை (மார்ச் 12) மாலை நிலைதடுமாறி விழுந்த 80 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் பேச்சாளர் கிரேஸ் வூ, பேருந்திலிருந்து இறங்குவதற்காக அந்த முதியவர் தமது இருக்கையிலிருந்து எழுந்தபோது கைப்பிடியைப் பிடிப்பதற்குள் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிவித்தார்.
அந்த முதியவர் பயணம் செய்த பேருந்துச் சேவை எண் 262, அங் மோ கியோவில் உள்ள சாலைச் சந்திப்பில் வலதுபுறம் திரும்பியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
அந்த முதியவருக்கு முதலுதவி அளித்த அப்பேருந்து ஓட்டுனர், ஆம்புலன்சை அழைத்ததாகவும் திருவாட்டி வூ சொன்னார்.
அங் மோ கியோ அவென்யூ 8, பீஷான் சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து இரவு 8 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த முதியவர் சுயநினைவுடன் இருந்தார். பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், அந்த முதியவர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு தாங்கள் சோகமடைந்துள்ளதாக திருவாட்டி வூ கூறினார்.
“சிரமமான இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.

