சக மாணவரின் தாய்க்குக் கொலை மிரட்டல் விடுத்ததற்காக தொடக்கநிலை மூன்றில் பயிலும் தன் மாணவர்கள் மூவரை செங்காங் கிரீன் தொடக்கப் பள்ளி தற்காலிகமாகப் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது.
அந்த மூவரும் தன் மகளைப் பகடிவதை செய்ததாகக் கூறி அவரின் தாய் புகார் அளித்தார். அதனையடுத்து, அப்பெண்ணுக்கு அந்த மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நி யின் எனும் ஃபேஸ்புக் பயனர், தன் மகள் பகடிவதைக்கு ஆளானதாகவும் அதன் காரணமாக தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அந்த மாணவர்கள் மூவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். தனக்குக் கிடைத்த ஒலிப்பதிவையும் அவர் பதிவேற்றம் செய்தார்.
தன் மகள் பலமுறை பகடிவதைக்கு ஆளாகியுள்ளார் என்றும் கல்வி அமைச்சும் பள்ளியும் இதற்கு மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
அதற்கு சிஎன்ஏ ஊடகம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த செங்காங் கிரீன் தொடக்கப் பள்ளி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மூவரின் பெற்றோரைத் தொடர்புகொண்டதாகவும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் உடனடியாகத் தற்காலிகமாகப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.