சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தொழில்நுட்பக் கல்விக் கழகத் திட்டமான ‘ஐடெல்ப் (ITELP)’ தனது பத்தாண்டு நிறைவை மே 17ஆம் தேதி கொண்டாடியது.
அங் மோ கியோ வட்டாரத்தின் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பயனடைந்த முன்னாள் மாணவர்களும் கலந்துகொண்டார்கள்.
சிண்டா இளையர் மன்றத்தின் (SINDA Youth Club) கீழ் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஐடெல்ப்’ திட்டம் கடந்த பத்தாண்டுகளில் மூன்று தொழில்நுட்பக் கல்விக் கழகங்களைச் சேர்ந்த ஒன்பது மாணவர் குழுக்களை வழிநடத்தியுள்ளது.
விலங்கு துன்புறுத்தல், மனநலம், போதைப்பொருள் புழக்கத் தடுப்பு, தனிமையில் வாடும் முதியோர் சமூகம், மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய விழிப்புணர்வு, சுற்றுச்சூழலில் நீடித்த நிலைத்தன்மையை ஆதரித்தல் போன்ற பல்வேறு தலைப்புகளை மாணவர்கள் கையாண்டுள்ளனர்.
“தொழில்நுட்பக் கல்விக் கழக இந்திய மாணவர்கள் கடந்து வந்த பாதை, வாழ்க்கையில் அவர்கள் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதற்கான சான்றாக கடந்த பத்தாண்டுகள் அமைந்துள்ளது,” என்று கூறினார் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘ஐடெல்ப்’ திட்டத்தின் முன்னாள் மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் எவ்வாறு முக்கியப் பங்கு வகித்தது என்பது குறித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்தத் திட்டம் தனக்கு தன்னம்பிக்கை அளித்ததாக தெரிவித்த முன்னாள் மாணவி நஸரீன் பானு, 18, ‘ஐடெல்ப்’ திட்டத்தின் மூலம் பெற்ற அனுபவம் சமூகத்திற்கு இன்னும் அதிகமாகப் பங்களிக்கத் தூண்டியதாகத் தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் மீள்திறனை வலுப்படுத்தவும் உதவும் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ், ஆண்டு முழுவதும் நடவடிக்கைகள் / பயிலரங்குகள் இடம்பெறுகின்றன. மாணவர்கள் சக மாணவர்களுடன் நேரம் செலவிடுவதுடன் சுவாரசியமான திறன்களையும் கற்றுக்கொள்ளலாம். உற்சாகமான, அனுபவ நடவடிக்கைகள் மாதந்தோறும் ஒரு வெள்ளிக்கிழமையில் நடத்தப்படும். வழிகாட்டல் அமர்வுகள் மாதந்தோறும் ஒரு சனிக்கிழமையில் இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
மேல் விவரங்களுக்குக் காண்க: https://www.sinda.org.sg/programme/itenable/
‘ஐடெல்ப்’ திட்டம் தவிர்த்து, தொழில்நுட்பக் கல்விக் கழக இந்திய மாணவர்களுக்கு சிண்டாவின் தனிமனிதர் வருமான ஊக்கத் தொகைத் திட்டம், தன்னம்பிக்கையையும் மீள்திறனையும் வளர்க்கும் ‘ஐடிஇஎனேபல்’ (ITEnable) திட்டம், தொழில்துறை வழிகாட்டுதல் முயற்சிகள் போன்றவையும் உதவி வருகின்றன.