சிங்கப்பூரின் லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகம் தனது பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
அதன் தொடர்பில் இவ்வாண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அது ஏற்பாடு செய்து உள்ளது.
அரிதான விலங்கியல் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய சிங்கப்பூரின் ஒரே இயற்கை வரலாற்று அரும்பொருளகமான அது, ஆண்டுதோறும் சராசரியாக 65,000 வருகையாளர்களை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 88,200 பேர் அரும்பொருளகத்துக்கு வருகைதந்து அவற்றின் அதிசயங்களைப் பார்வையிட்டனர்.
பத்தாண்டு நிறைவையொட்டி, இந்த ஆண்டு ஏராளமான நிகழ்வுகள் நடக்க இருப்பதால் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரும்பொருளகம் எதிர்பார்க்கிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான அந்த அரும்பொருளகம், 2015 ஏப்ரல் 18ஆம் தேதி திறக்கப்பட்டது. அதனைப் பார்வையிடச் செல்லும் சிங்கப்பூரர்களுக்கான நுழைவுக் கட்டணம் $18, சிங்கப்பூரர் அல்லாதோருக்கு $27.
இருப்பினும், மே 28ஆம் தேதி அரும்பொருளகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பொது வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் 600 வருகையாளர்களுக்குக் கட்டணம் ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அன்றைய தினம் வழிகாட்டி ஒருவரின் துணையோடு அரும்பொருளகத்தை இலவசமாகச் சுற்றிப் பார்க்கலாம். குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் அங்கு இடம்பெறும்.
அரிய வகைப் பூச்சி
இதற்கிடையே, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திலுள்ள லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை தாவரப் பூச்சியைக் கண்டுபிடித்து உள்ளதாக அறிவித்து உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு ‘கேம்பிலோமா சிங்கப்பூரா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.
மார்ச் 24ஆம் தேதி அரும்பொருளக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் அந்த விவரம் இடம்பெற்று உள்ளது. அறிவியல் சஞ்சிகையான ‘ஸுடாக்ஸா’விலும் (Zootaxa) அது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் அரும்பொருளகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிடப்பட்டன.