சிங்கப்பூர் கரிமநீக்க இலக்கை நோக்கி முன்னேறும். ஆனால், அது வாழ்வாதாரங்களுக்கும் எரிசக்திப் பாதுகாப்புக்கும் ஊறுவிளைவிக்கும் விதத்தில் அமையாது.
கரிமநீக்கம், சிங்கப்பூரின் லட்சியங்களுக்கும் குடும்பங்கள், வணிகங்களுக்கான ஆற்றல் கட்டுப்படியான விலையில் இருப்பதற்கும் இடையே சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத் துறைக்குப் பொறுப்புக்கு வகிக்கும் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
“புவிசார் அரசியல் சூழலுக்கு நாம் பதிலளிப்பதில் தகவமைத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் நடைமுறைவாதிகளாகவும் இருக்க வேண்டும். கரிமநீக்கம் என்பது சில செலவுகளுடன் வரும், ஆனால் என்னவானாலும் பரவாயில்லை என நாங்கள் கரிமநீக்கத்தைத் தொடர மாட்டோம்,” என்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அவர் கூறினார்.
வோகோ ஆர்ச்சர்ட் ஹோட்டலில் சிங்கப்பூர் பொருளியல் சங்கமும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த 17வது சிங்கப்பூர் பொருளியல் கொள்கை கருத்தரங்கில் டாக்டர் டான் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொருளியல் வல்லுநர்கள், வணிகத் தலைவர்கள், கல்வியாளர்கள் என 150 பேர் கலந்துகொண்டனர்.
முக்கியப் பொருளியல்கள் தங்கள் பருவநிலை உறுதிப்பாடுகளைக் குறைத்துக்கொண்டு சிங்கப்பூர் மட்டும் தொடர்ந்து இலக்குடன் சென்றால், அது போட்டியில் பின்தங்கக்கூடும் என்று மனிதவள அமைச்சருமான டாக்டர் டான் குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக, கரிமநீக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் சிங்கப்பூரின் அணுகுமுறைகளில் ஒன்று கரிம வரியாகும். இது, கரிம வெளியேற்றத்துக்கு ஒரு விலையை நிர்ணயிப்பதன் மூலம் வணிகங்கள் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க ஊக்குவிக்கிறது.
ஆனால், இதைச் சரியான அளவில் நிர்ணயிப்பதில்தான் சவால் உள்ளது என்று டாக்டர் டான் கூறினார்.
“சிங்கப்பூரின் ஒரு டன் கரியமிலவாயு வெளியேற்றத்துக்கான கரிம வரி $25ஆக உள்ளது. இது, ஏற்கெனவே நமது வட்டாரத்தில் மிக அதிகமாக உள்ளது. நாம் கவனமாக இல்லாவிட்டால், சிங்கப்பூரிலிருந்து பொருளியல் நடவடிக்கைகளையும் கரிம வெளியேற்றத்தையும் வேறொரு நாட்டிற்கு மாற்றிவிட்டுவிடக்கூடும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
குறைந்த கரிமத் தொழில்நுட்பங்களில் முதலீடுகள் குறைவது சிங்கப்பூரின் திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும். ஏனெனில், நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பங்கள் வணிக ரீதியாகச் செயல்படக்கூடியதாகவும் சிங்கப்பூரில் பயன்படுத்தக்கூடியதாகவும் மாற அதிக காலம் எடுக்கலாம் என்று டாக்டர் டான் கூறினார்.
ஏறக்குறைய 8 கிகாவாட் ஒருங்கிணைந்த திறன்கொண்ட திட்டங்களுக்கு அரசாங்கம் நிபந்தனைக்குட்பட்ட ஒப்புதல்களையும் உரிமங்களையும் வழங்கியுள்ளதைச் சுட்டிய அவர், சிங்கப்பூரின் குறைந்த கரிம மின்சார இறக்குமதிகளை அதற்கு ஓர் உதாரணமாகக் கூறினார்.
கரிமநீக்கத்தின் செலவுகளையும் பலன்களையும் சமநிலைப்படுத்துவதில் சிங்கப்பூர் நடைமுறை சார்ந்ததாகவும் மாற்றங்களுக்குப் பதிலளிப்பதாகவும் இருக்கும் அதேவேளையில், தனது நடவடிக்கைகள், சொந்தக் கொள்கைகளிலும் நலன்களிலும் இன்னும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் டான் கூறினார்.

