டிசம்பர் 26ஆம் தேதி மூன்று புதிய ரயில் நிலையங்கள் திறக்கப்படும்

டிசம்பர் 26ஆம் தேதி மூன்று புதிய ரயில் நிலையங்கள் திறக்கப்படும்

கிழக்குப் பகுதிக் குடியிருப்பாளர்கள் ஜோகூர் செல்ல நேரடி இணைப்பு
1 of 3
படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்
படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்
படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

04 Nov 2026 - 12:44 pm

2 mins read

தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் கடைசி இரண்டு நிலையங்களான பிடோக் சவுத், சுங்கை பிடோக் ஆகியவற்றுடன், டௌன்டவுன் பாதையில் உள்ள ஸீலின் நிலையமும் டிசம்பர் 26ஆம் தேதி சேவைகளைத் தொடங்கவுள்ளன.

தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் அமைந்துள்ள சுங்கை பிடோக் நிலையம், டௌன்டவுன் பாதையுடன் இணையும் ஒரு சந்திப்பு நிலையமாகவும் செயல்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் புதன்கிழமை (நவம்பர் 4) தெரிவித்தார். அந்தப் புதிய நிலையங்கள் இரண்டு முக்கிய ரயில் வழித்தடங்களை ஒன்றிணைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் நகர்ப்புற நடமாட்ட வாரத்தின் (Singapore Urban Mobility Week) தொடக்க விழாவில் பேசிய திரு சியாவ், தீவின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், வடக்குப் பகுதியில் உள்ள உட்லண்ட்சுக்குச் செல்ல நேரடிப் பாதை அமையும் என்றும் கூறினார்.

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் சேவைக்கான பணிகள் நிறைவடைந்ததும், அவர்கள் ஜோகூர் பாருவுக்கு நேரடியாகச் செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நவம்பர் 4 முதல் 6 வரை நடைபெறும் அந்நிகழ்வில், 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 8,000 கொள்கை வகுப்பாளர்கள், போக்குவரத்து இயக்குநர்கள், தொழிற்துறைத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சாங்கி தொழிற்பேட்டை, தெம்பனிஸ் வட்டார நிலையம் போன்ற கிழக்குப் பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு நடுவங்களுக்கான போக்குவரத்து இணைப்புச் சேவைகளை அந்தப் புதிய நிலையங்கள் மேம்படுத்தும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நவம்பர் 4ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் வசிப்பவர்களுக்கும் பணிபுரிபவர்களுக்கும் மேலும் விரைவான, வசதியான பயணங்களை மேற்கொள்ள அந்த நிலையங்கள் வழிவகுக்கும் என்று அது கூறியது.

எடுத்துக்காட்டாக, ஹெவ்லொக் பகுதியிலிருந்து சாங்கி தொழிற்பேட்டைக்குச் செல்ல தற்போது கிட்டத்தட்ட 70 நிமிடங்கள் ஆகும்; அதோடு, செல்லும் வழியில் பேருந்து ஒன்றுக்கும் மாற வேண்டியுள்ளது.

ஆனால், புதிய ரயில் நிலையங்கள் திறக்கப்பட்ட பிறகு, பயணிகள் எந்தவொரு பேருந்துக்கும் மாற வேண்டிய தேவை இருக்காது. அதோடு, 45 நிமிடங்களில் அங்குச் சென்றடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ரயில் கட்டமைப்பு, சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து முறையின் ‘முதுகெலும்பு’ என்றும் ரயில்கள் தொடர்ந்து ஆக வசதியான தெரிவாக இருப்பதை உறுதிசெய்வதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் திரு சியாவ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்