சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில் நிகழ்ந்த வெடிப்பில் ‘மக்கான்சுத்ரா’ நிறுவன உரிமையாளரான கே.எஃப்.சீத்தோவின் சகோதரர் கொல்லப்பட்டார்.
அந்த வெடிப்பு எரிவாயுவால் நேர்ந்ததாக நம்பப்படுகிறது. அதற்கு மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகியிருக்கும் நிலையில் மாண்ட சீத்தோ குவோக் மெங்கின் எஞ்சிய உடற்பாகங்கள் சிங்கப்பூர் கொண்டு வரப்படவுள்ளது. அவருக்கு வயது 68.
அதனைத் தொடர்ந்து இந்தத் துயரச் சம்பவத்தின் தொடர்பில் மனத்தளவில் முற்றுப்புள்ளி வைக்க மவழி பிறந்துள்ளதாக திரு சீத்தோ, வியாழக்கிழமை (மார்ச் 28) ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
“மூன்று மாதங்களுக்குப் பிறகு எனது சகோதரர் உடலின் மிச்சத்தை மீட்டுக்கொள்ள முடிகிறது. அவரையும் அவரின் மனைவியையும் பலிவாங்கிய அந்த எரிவாயு வெடிப்பு அறவே எதிர்பாராத துர்திர்ஷ்டவசமான சம்பவம். ஆனால், மேலே உள்ள சொர்க்கம் என்றுமே மர்மமான முறையில் செயல்படும். வெடிப்பு நேர்ந்ததற்கான காரணங்களை கண்டறியும் விசாரணை தொடர்கிறது. ஆனால், இப்போதைக்கு எங்களுக்கு இதற்கான முற்றுப்புள்ளி தேவை,” என்று திரு சீத்தோ ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
அச்சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றொருவரான திரு சீத்தோ குவோக் மெங்கின் மனைவி சாங் காய் என்னின் எஞ்சிய உடற்பாகங்களையும் சிங்கப்பூர் கொண்டு வர அனுமதி தரப்பட்டுள்ளதா என்ற விவரம் தெரியவில்லை.

