மார்சிலிங் காட்டுப்பகுதியின் புதரில் மறைந்துகிடக்கும் எரிபொருள் சேமிப்புக் கிடங்கை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 12.5 ஹெக்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதிக்குள் சேறும் சகதியும் குழாய்களும் கிறுக்கப்பட்ட சுவரோவியங்களும் வரையப்பட்ட அந்த கான்கிரீட் சுரங்கப்பாதை இந்நாள் வரை மறைந்து கிடக்கிறது.
விளக்கு வெளிச்சம் இல்லாமல் சுரங்கத்துக்குள் பாதுகாப்பாகச் செல்வது மிகக் கடினம். இருள் சூழ்ந்த இந்த இடத்தின் நுழைவாயிலைக் கண்டுபிடிப்பது சவாலானது. பனை மரங்களும் முறுக்கிய கொடிகளும் நிறைந்த காட்டுக்குள் அந்த நுழைவாயில் மறைந்துள்ளது.
‘சிங்கப்பூர் பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்ஸ்’ என்ற குழுவினர் இந்த இடத்தைத் தற்செயலாகக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பகுதிக்கான எதிர்காலத் திட்டங்களை வகுக்க உதவும் விரிவான ஆய்வின் ஒரு பகுதியாக மார்சிலிங் சுரங்கப்பாதைகள் ஆய்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இந்தச் சுரங்கப்பாதைகள், சிங்கப்பூரிலும் இவ்வட்டாரத்திலும் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய அல்லது போர்க்காலத்தைச் சேர்ந்த எஞ்சியிருக்கும் ஒரே நிலத்தடி எரிபொருள் சேமிப்புத் தொட்டி என நம்பப்படுவதாகச் சிங்கப்பூர் நில ஆணையம், தேசிய மரபுடைமைக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை கூட்டாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தன.
அட்மிரால்டி ரோடு வெஸ்ட், அட்மிரால்டி ரோடு, மார்சிலிங் கிரசென்ட் ஆகியவற்றால் சூழப்பட்ட அரசு நிலத்தை உள்ளடக்கிய அந்த இடத்தை ஆய்வு செய்வதற்கான ஏலக்குத்தகையைச் சிங்கப்பூர் நில ஆணையம் வெளியிட்டிருந்தது. அது அக்டோபர் 27ஆம் தேதி முடிவுற்றது.
“மரபுடைமை, தொல்பொருள் ஆய்வுகள், புவி இயற்பியல் ஆய்வுகள், சுற்றுச்சூழல் மதிப்பீடு, கட்டமைப்பு உறுதித்தன்மைச் சோதனைகள், வெடிக்காத வெடிமருந்துகள் தொடர்பான ஆய்வுகள், பிற சோதனைப் பணிகள் உள்ளிட்டவை ஆய்வுகளில் அடங்கும்,” என்று அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
எரிபொருள் சேமிப்பு வசதியைத் தவிர, மார்சிலிங் சுரங்கப்பாதைகளில் அதிக அளவில் சுவரோவியங்கள் வரையப்பட்ட பகுதிக்கு அருகே மறைவிடமொன்றும் உள்ளது. குனிந்து அல்லது அமர்ந்து மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு மிகவும் குறுகலான சுரங்கப்பாதைகளைக் கொண்ட அந்த மறைவிடத்தின் வரலாற்றுப் பின்னணி அல்லது பயன்பாடு குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
ஆய்வுக்குரிய இந்தப் பகுதி, நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட இடம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இதன் பயன்பாடு பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
தற்போதைக்கு அந்த இடத்திற்கான உறுதியான திட்டம் எதுவும் இல்லை என்று மூன்று அமைப்புகளும் தெரிவித்தன.
தேவைப்படும் நேரத்தில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று அவை கூறின.
