பொருளியல் வளர்ச்சியையும் கரிம வெளியேற்றத்தையும் பிரிப்பது அவசியம்: ரவி மேனன்

பொருளியல் வளர்ச்சியையும் கரிம வெளியேற்றத்தையும் பிரிப்பது அவசியம்: ரவி மேனன்

3 mins read
தென்கிழக்காசியா எதிர்கொள்ளும் மூன்று முக்கியப் பருவநிலை சவால்கள்
f97ff4dd-6dac-4a70-b5e9-81e34590812c
‘தென்கிழக்காசிய பருவநிலை உரையாடல்’ நிகழ்ச்சியின் குழுக் கலந்துரையாடல் அங்கத்தில் இந்தோனீசிய மக்கள் ஆலோசனைக் கூட்டவையின் துணை நாயகர் எடி சுபர்னோவும் (இடமிருந்து இரண்டாவது) பருவநிலை செயல்பாட்டிற்கான சிங்கப்பூர்த் தூதர் ரவி மேனனும் பங்கேற்றனர். - படம்: யோகிதா அன்புச்செழியன்

பொருளியல் வளர்ச்சியையும் கரிம வெளியேற்றத்தையும் தனித்தனியாகப் பிரித்துக் கையாளாத உலகின் ஒரே முக்கிய வட்டாரமாகத் தென்கிழக்காசியா திகழ்கிறது. இதற்குத் தீர்வு காணத் தவறினால், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று பருவநிலை செயல்பாட்டுக்கான சிங்கப்பூர்த் தூதர் ரவி மேனன் தெரிவித்துள்ளார்.

தெமாசெக் நிறுவனத்தின் ‘ஈகோஸ்பெரிட்டி’ (Ecosperity) இயக்கமும் தேசியப் பருவநிலை மாற்றச் செயலகமும் இணைந்து நடத்திய ‘தென்கிழக்காசியப் பருவநிலை உரையாடல்’ நிகழ்ச்சியில் வியாழக்கிழமை (மே 21) உரையாற்றிய திரு மேனன் இவ்வட்டாரம் எதிர்கொள்ளும் மூன்று முக்கியச் சவால்களைச் சுட்டிக்காட்டினார்.

பருவநிலை செயல்பாட்டிற்கான சிங்கப்பூர்த் தூதர் ரவி மேனன் ‘தென்கிழக்காசியப் பருவநிலை உரையாடல்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
பருவநிலை செயல்பாட்டிற்கான சிங்கப்பூர்த் தூதர் ரவி மேனன் ‘தென்கிழக்காசியப் பருவநிலை உரையாடல்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். - படம்: யோகிதா அன்புச்செழியன்

680 மில்லியன் மக்களின் பொருளியல் வளர்ச்சியை உறுதிசெய்தல், கரிம வெளியேற்றத்தைக் குறைத்தல், தீவிரப் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்பத் தற்காத்துக்கொள்ளுதல் ஆகியவையே அந்தச் சவால்கள் ஆகும்.

“பொருளியல் வளர்ச்சியையும் கரிம வெளியேற்றத்தையும் பிரிக்க முடியாவிட்டால், ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்,” என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசாங்க, வர்த்தகத் தலைவர்களிடம் அவர் கூறினார்.

வளர்ந்த நாடுகள் அவற்றின் கரிம வெளியேற்றத்தைக் குறைத்துக்கொள்ளும் அதேவேளையில், தொடர்ந்து வளர்ச்சிகண்டும் வருகின்றன. இருப்பினும், தென்கிழக்காசியாவில் கரிம வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காடழிப்பு, மின்சார உற்பத்திக்குப் பெரும்பாலும் படிம எரிபொருள்களைச் சார்ந்திருப்பது, அத்துடன் விரைவான தொழில்மயமாக்கல் ஆகியவையே அதற்கு முக்கியக் காரணங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய சராசரியைவிட தென்கிழக்காசியா இரு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது. எனினும், இந்த நிலையை எதிர்கொள்ள பெருமளவிலான நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது. ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் பருவநிலைத் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் 400 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என்றாலும் 34 பில்லியன் டாலர் நிதியே கிடைக்கிறது என்றார் அவர்.

இதேபோல், இயற்கை சார்ந்த தீர்வுகளுக்கு ஆண்டுக்கு 54 பில்லியன் டாலர் தேவைப்படும் வேளையில், 8 பில்லியன் டாலர் நிதியே திரட்டப்படுகிறது என்று திரு மேனன் குறிப்பிட்டார்.

இந்த மும்முனைச் சவாலைக் கடக்க, அரசாங்கங்களும் தனியார் துறையும் மூன்று முக்கிய வழிகளில் இணைந்துச் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவை, கரிமச் சந்தைகளின் நம்பகத்தன்மையை மீண்டும் உருவாக்குதல், இயற்கை சார்ந்த தீர்வுகளுக்கும் எளிதில் கலப்பு நிதி கிடைக்கச் செய்தல், பருவநிலை மீள்திறனுக்கான முறையான அணுகுமுறையை உருவாக்குதல் ஆகியவையாகும்.

நிதி நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளில் பருவநிலை அபாயங்களைக் கணக்கில் கொள்வது தற்காப்பு நடவடிக்கைகளுக்கான மிக முக்கிய முயற்சியாகும் என்றார் அவர்.

“வெள்ள அபாயம் உள்ள கடலோரப் பகுதிகளில் திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும்போது, அந்தச் சொத்தின் வாழ்நாளில் ஏற்படக்கூடிய பருவநிலை பாதிப்புகள் கணக்கிடப்பட வேண்டும். இத்தகைய அபாயங்களை மதிப்பிடாத நிதி நிறுவனங்கள், தங்களுக்குத் தெரியாமலேயே மறைமுகப் பொறுப்புகளைச் சுமக்கின்றன,” என்று திரு மேனன் எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குழுக் கலந்துரையாடல் அங்கத்தில், இந்தச் சவால்களின் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இந்தோனீசிய மக்கள் ஆலோசனைக் கூட்டவையின் துணை நாயகர் எடி சுபர்னோ பேசினார்.

குழுக் கலந்துரையாடல் அங்கத்தில் இந்தோனேசிய மக்கள் ஆலோசனைக் கூட்டவையின் துணை நாயகர் எடி சுபர்னோவும் (இடமிருந்து இரண்டாவது) பருவநிலை செயல்பாட்டிற்கான சிங்கப்பூர்த் தூதர் ரவி மேனனும் பங்கேற்றனர்.
குழுக் கலந்துரையாடல் அங்கத்தில் இந்தோனேசிய மக்கள் ஆலோசனைக் கூட்டவையின் துணை நாயகர் எடி சுபர்னோவும் (இடமிருந்து இரண்டாவது) பருவநிலை செயல்பாட்டிற்கான சிங்கப்பூர்த் தூதர் ரவி மேனனும் பங்கேற்றனர். - படம்: யோகிதா அன்புச்செழியன்

இந்தோனேசியாவின் எரிசக்தி மாற்றம் முரண்பாடாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த எட்டு ஆண்டுகளில் 190 பில்லியன் டாலர் மதிப்பில் கிட்டத்தட்ட 52 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்க நாடு திட்டமிட்டுள்ளது. எனினும், எரிசக்திப் பாதுகாப்பைக் கருதி, நிலக்கரி இருப்புகளை மற்றோர் ஆதாரமாக நம்பியிருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது என்றார் அவர்.

தனியார் முதலீடுகளை ஈர்க்க அரசாங்க நடைமுறைகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை டாக்டர் சுபர்னோ, திரு மேனன் இருவரும் வலியுறுத்தினர்.

கழிவிலிருந்து மின்சக்தி தயாரிக்கும் திட்டங்களுக்கான சிக்கலான விதிமுறைகளை 2025ஆம் ஆண்டு இந்தோனீசிய அதிபர் ஆணை மூலம் இந்தோனீசியா சீரமைத்தது. இதன் விளைவாக, பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இத்துறையில் 33 புதிய கழிவு எரிப்பு உலைகளுக்காக 240 முதலீட்டாளர்களை ஈர்க்க முடிந்ததாக டாக்டர் சுபர்னோ கூறினார்.

இந்த நிதி, கொள்கை நடைமுறைகள் இவ்வட்டார மக்களின் வாழ்வாதாரத்தோடு நேரடித் தொடர்புடையவை என்று திரு மேனன் நினைவுறுத்தினார்.

“மீகாங் படுகையில் கடல்நீர் உட்புகுவதால் விவசாய நிலங்களைக் கைவிடும் விவசாயிகள், ஒவ்வொரு முறை வெள்ளம் வரும்போதும் வேலைநாள்களை இழக்கும் ஜகார்த்தாவின் ஏழை மக்கள் எனப் பலருக்கு இதுவே அன்றாட வாழ்க்கை.

“அவர்கள் மாறிவரும் சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், வேகமாகவும், மலிவாகவும், பெரிய அளவிலும் அதைச் செய்வதற்கான நிதியும் தொழில்நுட்பமும் அவர்களிடம் இல்லை,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
நீடித்த நிலைத்தன்மைசுற்றுச்சூழல்பொருளியல்கரிம வெளியீடுசிங்கப்பூர்இந்தோனீசியா