நிலையற்ற சூழலில் ஆழமான ஒத்துழைப்பு ஆசியானுக்கு அவசியம்: பிரதமர் வோங்

நிலையற்ற சூழலில் ஆழமான ஒத்துழைப்பு ஆசியானுக்கு அவசியம்: பிரதமர் வோங்

படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

15 Nov 2026 - 5:54 pm

2 mins read

உலகில் அதிகரித்துவரும் நிச்சயமற்ற சூழலால் ஆசியான் கூட்டமைப்பு இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமான இடையூறுகளையும் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.

ஆயினும், அக்கூட்டமைப்பு ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் இருக்கும் வரை தனது பாதையைச் சிறப்பாகக் கடந்து மேலும் வலிமையுடன் உருவெடுக்க முடியும்.

பிலிப்பீன்சில் தொடங்கிய ஆசியான் உச்சநிலை மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) கலந்துகொண்டு பேசிய சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இதனைத் தெரிவித்தார்.

மின்னிலக்க ஒருங்கிணைப்பை முன்னெடுத்துச் செல்லுதல், எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், வெளிப்புறக் கட்டமைப்புகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றின் மூலம் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தி, இடையூறுகளைத் திடமாகச் சமாளிப்பது ஆசியானுக்கு அவசியமான ஒன்று அவர் குறிப்பிட்டார்.

ஆசியான் தலைமைப் பொறுப்பிலுள்ள பிலிப்பீன்ஸ் இந்தத் துறைகளில் பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளது என்றும் இதற்கு அடுத்து தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள சிங்கப்பூர் அந்த வேகத்தைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளை மேம்படுத்தும் என்றும் திரு வோங் கூறினார்.

மேலும், ஆசியானின் செயல்திட்டங்களில் தொடர்ச்சியை உறுதிசெய்ய, சிங்கப்பூருக்கு அடுத்து தலைமைப் பொறுப்பேற்கவுள்ள தாய்லாந்துடன் இணைந்து பணியாற்றப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் உச்சநிலை மாநாட்டின் இரண்டாவது கூட்டத்தில், இவ்வாண்டுக்கான பணிகள், முன்னேற்றங்கள் குறித்து ஆய்வுசெய்ய தென்கிழக்கு ஆசியத் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

முதல் கூட்டம் கடந்த மே மாதம் பிலிப்பீன்ஸின் செபு நகரில் நடைபெற்றது.

மத்திய கிழக்கு மோதல், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் போக்குவரத்து, எரிசக்தி, உணவுத் துறைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியன காரணமாக, மே மாதக் கூட்டம் நடைபெறாமலேயே போகும் சூழல் உருவானதை நினைவுகூர்ந்த பிரதமர் வோங், அத்தகைய சூழல் இப்போதும் மிகுந்த நிலையற்ற தன்மையுடனேயே நீடிப்பதாகக் குறிப்பிட்டார்.

“இதபோன்ற பல்வேறு கடினமான சூழல்களை ஆசியான் கடந்த பல ஆண்டுகளாகக் கடந்து வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் நம்மால் சரியான திசையில் பயணம் செய்து முன்னேற முடிந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக, மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு உடன்பாட்டில் ஆசியான் உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டன.

மூன்றாண்டு காலப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அந்த உடன்பாடு சாத்தியமானது.

அணுக்கமான மின்னிலக்கப் பொருளியல் ஒருங்கிணைப்பிற்கு அடித்தளமிடுவதோடு, 2030ஆம் ஆண்டிற்குள் இந்த வட்டாரத்தின் மின்னிலக்கப் பொருளியலை 2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாக்க இந்த உடன்பாடு உதவும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிறுவனங்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் பரிவர்த்தனைகளை மலிவானதாகவும் எளிதானதாகவும் மாற்ற, எல்லை தாண்டிய கட்டண முறைக் கட்டமைப்பை ஆசியான் உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் வோங் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்