பொருளியல் வலிமை முக்கியத்துவம் பெறும் உலகச் சூழலில், தனித்தனியாகப் பார்க்கையில் ஆசியான் நாடுகள் அளவில் சிறியவை என்பதால் அவற்றால் தனித்து இயங்க முடியாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
ஆயினும், ஆசியான் அமைப்பு சீர்திருத்தம் கண்டு மேலும் ஒருங்கிணைந்தால், வரும் ஆண்டுகளில் அதன் பொருளியல் இருமடங்கிற்கும் மேலாக வளர்ச்சியடையும் என்றும் அது வட்டாரத்தின் மீள்திறனை வலுப்படுத்தும் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த ஆசியான் உச்சநிலை மாநாட்டில் தென்கிழக்காசிய, உலகத் தலைவர்களுடனான மூன்று நாள் சந்திப்புகளை நிறைவுசெய்த பின்னர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) சிங்கப்பூர் ஊடகங்களிடம் பிரதமர் பேசினார்.
வலுவான பொருளியல் ஒருங்கிணைப்பும் விரிவான பங்காளித்துவக் கட்டமைப்பும் ஆசியான் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் சொன்னார்.
தற்போது 4.5 டிரில்லியன் வெள்ளியாக உள்ள ஆசியான் பொருளியல், 2040களின் முற்பகுதியில் 10 டிரில்லியன் வெள்ளியாக வளரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
“2026ஆம் ஆண்டின் ஆசியான் தலைமைப் பொறுப்பை வகுக்கும் பிலிப்பீன்ஸ், சவாலான ஆண்டில் குழுவை வழிநடத்தி, மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு உடன்பாட்டை இறுதிசெய்தது போன்ற நல்ல விளைவுகளை எட்டியுள்ளது. அடுத்த ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கும் சிங்கப்பூர் அம்முயற்சிகளை முன்னெடுத்து, எரிசக்தி மீள்திறன், எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினை ஆகியவற்றில் ஒத்துழைப்பைத் தொடரும்.
“அமெரிக்கா, சீனாவுடன் மட்டுமல்லாமல், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் ஆகியவற்றுடனும் பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதன்மூலம் ஆசியான் தனது உத்திசார்ந்த தன்னாட்சியைப் பாதுகாத்து, திறந்த வட்டாரமாகத் திகழும்,” என்று திரு வோங் கூறினார்.
ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கும் சிங்கப்பூர், மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு உடன்பாடு நிறுவனங்களால் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் என்று அவர் சொன்னார். அதன்மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படலாம்.
புகைமூட்டப் பிரச்சினையை வேரிலேயே களைந்து, தவறிழைக்கும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் தீச்சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று பிரதமர் வோங் வலியுறுத்தினார்.
கலிமந்தான், சுமத்ரா தீவுகளில் பற்றியெரிந்த தீயால் தென்கிழக்காசியாவில் புகைமூட்டம் சூழ்ந்த நிலையில், இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் வெளிப்படையான, ஆக்ககரமான சந்திப்பை நடத்தியதாகத் திரு வோங் தெரிவித்தார்.
இந்தோனீசியா, சிங்கப்பூரின் நெருங்கிய, முக்கியப் பங்காளி என்பதால் அந்நாடு வெற்றிபெற தாம் விரும்புவதாகவும் பல துறைகளில் இருதரப்புக்கும் நன்மையளிக்கும் பங்காளித்துவத்தைத் தொடர அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
