இந்தியாவைப் பற்றிய புரிதலையும் அங்கீகரிப்பையும் மேலும் ஆழமாக்குவது சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளுக்கு வலுசேர்த்து இன்னும் பல வழிகளில் இணைந்து செயல்பட வழிவகுக்கும் என்று கூறியுள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
இந்தியாவைப் பற்றிய பரந்த புரிதலுக்கான வலுவான அடித்தளத்தை அமைப்பது அவசியம் என்றும் அது தொடர்ச்சியான பணி என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
அந்த வகையில் மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை ஊக்குவித்து மேம்படுத்த இன்னும் ஏராளம் செய்யவேண்டியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். அது அரசாங்கத்தின் பணி மட்டுமல்ல, சிங்கப்பூரர்களும் இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் பிரதமர்.
மாணவர் பரிமாற்றங்கள் அதிகரிக்கவேண்டும். தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சிங்கப்பூரர்கள் சிறிது காலம் செலவிட முனைப்புடன் ஆர்வம் கொள்ளவேண்டும் என்று திரு வோங் விருப்பம் தெரிவித்தார்.
ஐஐடி எனும் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் போன்ற தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் புதிய தொழில்முனைப்புத் திட்டங்களில் புத்தாக்க வணிகங்களைத் தொடங்குவதுடன் ‘யுனிகோர்ன்’ எனும் US$1 பில்லியனுக்குமேல் மதிப்புடைய தனியார் நிறுவனங்களாக வளர்ச்சியடையும் தொழில்முனைப்புகளிலும் மாணவர்கள் ஈடுபடுவதை அவர் எடுத்துக்காட்டினார்.
சிங்கப்பூரர்கள் அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் வேலை செய்வதன் வழியாகவும் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் சிங்கப்பூரர்கள் சுற்றுப்பயணத்திற்காக இந்தியாவிற்குச் செல்வதாலும் இந்தியா குறித்து ஆழமான புரிதலை ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்தியாவிற்கான தமது மூன்று நாள் அதிகாரத்துவப் பயணத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை (செப்டம்பர் 4) இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் புதுடெல்லியில் அமைந்துள்ள தாஜ்மகால் நட்சத்திர விடுதியில் சிங்கப்பூர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே, அரசாங்க அளவிலும் வணிக ரீதியாகவும் உள்ள வலுவான உறவுகளைத் தாண்டி மக்களுக்கு இடையிலான உறவுப்பாலத்தை மேலும் வலுவாக்குவது பற்றி தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வணிகம், முதலீடுகளுக்கு அப்பால் நட்புறவைப் பேணுவது மிக முக்கியம் என்றும் அது மக்களுக்கு மத்தியிலான பிணைப்பையே அடித்தளமாகக்கொண்டிருப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
சிங்கப்பூரிலுள்ள இந்திய வம்சாவளியினர் மிகவும் உதவியாக உள்ளனர் என்றும் இந்திய வணிக உலகில் கொடிகட்டிப் பறக்கும் பலர், சிங்கப்பூருடன் தொடர்பிலுள்ள நிலையில் அவர்கள் இருதரப்பு வர்த்தக சமூகத்தை ஒன்றிணைத்து புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருவதையும் அவர் சுட்டினார்.
பசுமை அமோனியா, குறைந்த கரியமில ஹைட்ரஜன் போன்ற புத்தாக்கத் துறைகளில் ஆர்வத்துடன் சிங்கப்பூர் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளன என்றார் திரு வோங்.
ஆசிய வட்டாரம் குறித்து கருத்துரைத்த திரு வோங், வட்டார ரீதியிலான சமநிலையை ஏற்படுத்துவதில் ஆசியான் - இந்தியா உறவு மிகவும் முக்கியமானது என்றார்.
இரு தரப்பினருக்கும் நன்மையளிக்கும் வகையிலேயே வாய்ப்புகள் உள்ளன என்ற பிரதமர், ஆசியாவில் அனைவருக்கும் செழிப்பைத் தரக்கூடிய, மீள்திறனை அதிகரிக்கக்கூடிய வகையில் இந்த உறவுகள் உள்ளன என்றார்.

