பற்றாக்குறை எனும் இருளை, மனவலிமை எனும் ஒளியால் களையலாம்

தீபாவளிக் கொண்டாட்டம்: பணத்தை விஞ்சிய பாசம்

3 mins read
f4d8998d-b7d7-4be2-8a7c-524692ef86f2
பிள்ளைகள் அகிலேஷ்வரன் பிரபாகரன் (வலது), பிரகதீஸ் ரூபன் பிரபாகரனுடன் ஒற்றைத் தாயார் வெண்ணிலா சுப்பிரமணியன். - படம்: த.கவி

விவேகமற்ற மனம், விளக்கு இல்லாத வீடு போன்றது. தவறான முடிவுகளாலும் சாதகமற்ற சூழ்நிலையாலும் வாழ்க்கை சில நேரங்களில் இருண்டுபோகலாம்.

சொந்த வீடும் நிலையான வருமானமும் இன்றி கடந்த பத்தாண்டுகளாக மூன்று பிள்ளைகளை வளர்த்து வரும் 52 வயது வெண்ணிலா சுப்பிரமணியனின் வாழ்க்கை அதற்கொரு சான்று.

இருந்தபோதும், தம் மனத்தைத் தேற்றிக்கொண்டு, நம்பிக்கை என்ற தீபத்தை மனத்தில் ஏற்றி வருகிறார் திருவாட்டி வெண்ணிலா. முன்னேறுவதற்கான மனவலிமையைப் பெற, பண்டிகைக்காலக் குதூகலத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதாக மார்சிலிங் வட்டாரத்தில் வசிக்கும் அவர் கூறுகிறார்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ‘காம்லிங்க் பிளஸ்’ திட்டத்தின்கீழ் ஈரறை வாடகை வீட்டில் தம் மகன்கள் பிரகதீஸ் ரூபன், 19, அகிலேஷ்வரன், 12, லிங்கேஷ்வரன், 10, ஆகியோருடன் அவர் வாழ்ந்து வருகிறார்.

வீடு சிறியதாக இருந்தாலும் தம்மால் இயன்ற அளவு அலங்காரம் செய்து, பலகாரங்களையும் வாங்கி வீட்டிற்கு இவர்கள் பொலிவு சேர்த்துள்ளனர்.

“எல்லாவற்றுக்கும் மேலாக உணவு விலையேற்றத்தைச் சமாளிப்பது எனக்கு மிகவும் கடுமையாக இருந்தது. அவ்வப்போது கிடைக்கும் பற்றுச்சீட்டுகளும் அன்பளிப்புப் பைகளும் பேருதவியாக இருக்கின்றன. அண்மையில் தீபாவளிக்காக உணவுப்பொருள் வாங்குவதற்கான உதவிகளும் கிட்டின,” என்றார் திருவாட்டி வெண்ணிலா.

மார்சிலிங் ரோட்டிலுள்ள ஈரறை அரசாங்க வாடகை வீட்டில் தன் பிள்ளைகளுடன் வசிக்கும்  ஒற்றைப் பெற்றோரான வெண்ணிலா சுப்பிரமணியன்.
மார்சிலிங் ரோட்டிலுள்ள ஈரறை அரசாங்க வாடகை வீட்டில் தன் பிள்ளைகளுடன் வசிக்கும் ஒற்றைப் பெற்றோரான வெண்ணிலா சுப்பிரமணியன். - படம்: த.கவி

தோ பாயோவில் அக்காவுடனும் தம்பியுடனும் வளர்ந்த திருவாட்டி வெண்ணிலாவின் தந்தை பேருந்து ஓட்டுநராகவும் தாயார் தையல்காரராகவும் வேலை செய்தனர்.

உயர்நிலை நான்கு வரை படித்துள்ள இவர், பாதுகாவல் அதிகாரி, பகுதி நேரப் பணிப்பெண் உள்ளிட்ட சிறிய வேலைகளைச் செய்து வந்தார்.

இவரின் இரண்டு திருமணங்களும் நிலைக்கவில்லை.

“எனது இரண்டு திருமணங்களுமே பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டவை. முதல் திருமணத்தின்போது என் மாமியாரும் நாத்தனாரும் என்னைச் சரியாக நடத்தாததால் மணமுறிவு பெற்றேன். என் இரண்டாவது கணவர் போதைப் புழங்கியாக இருந்தது மீண்டும் மணமுறிவுக்கு இட்டுச் சென்றது,” என்று திருவாட்டி வெண்ணிலா பகிர்ந்துகொண்டார்.

தொடக்கத்தில் பகுதி நேர பண்ணிப்பெண்ணாக வேலை செய்த இவர், தொடர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிறார்.

இளம் பிள்ளைகளைத் தனியே கவனிக்கும் கட்டாயத்திற்கு ஆளானதால் பல ஆண்டுகளாக முழு நேர வேலையில் சேரவும் இவரால் முடியவில்லை எனக் கூறினார்.

மகன்களுடன் தாயார் வெண்ணிலா சுப்பிரமணியன்.
மகன்களுடன் தாயார் வெண்ணிலா சுப்பிரமணியன். - படம்: வெண்ணிலா சுப்பிரமணியன்.

‘காம்லிங்க் பிளஸ்’, ‘காம்கேர்’ உள்ளிட்ட அரசாங்க உதவித்திட்டங்கள், சிண்டா, ஜாமியா போன்ற சமூக அமைப்புகளின் உதவி, முதல் கணவர் வழங்கும் ஜீவனாம்சம் ஆகியவற்றால் இவரால் ஓரளவுக்கு வீட்டை நிர்வகித்து, பிள்ளைகளை வளர்க்க முடிகிறது.

இருந்தபோதும், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னியல் துறையில் பயின்றுவரும் தம் மூத்த மகன், குடும்பத்திற்கு விடிவெள்ளியாய்த் திகழ்வார் என நம்புகிறார் திருவாட்டி வெண்ணிலா.

“என் பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்கள் நல்லபடியாக வளர்ந்து ஆளாக வேண்டும் என விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

திறன்மேம்பாட்டுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஊக்கத்தொகையைப் பயன்படுத்தி தாமும் வகுப்பில் சேர ஆசைப்படும் திருவாட்டி வெண்ணிலா, தம் தாயாரைப் போல தையல்காரராக ஆசைப்படுகிறார்.

வாழ்க்கைப் பயணத்தில் வழிநெடுக, பண்டிகைகளைக் கொண்டாடி, சலிப்பைத் தவிர்த்து மகிழ்ச்சியாக இருக்கும்படி மக்களுக்குக் கூற விரும்புகிறார் திருவாட்டி வெண்ணிலா.

சிரமம், செலவு எவ்வளவு இருந்தாலும் சிறிய வழிகளையாவது கையாண்டு திருநாளில் மட்டுமின்றி, வாழ்நாள் முழுமைக்கும் ஒளியூட்டலாம் என்பது இவரது நம்பிக்கை.

குறிப்புச் சொற்கள்