கோலாகலமாகத் தொடங்கிய தீபாவளிக் கொண்டாட்டங்கள்

லிட்டில் இந்தியாவில் தீபாவளி ஒளியூட்டு

கோலாகலமாகத் தொடங்கிய தீபாவளிக் கொண்டாட்டங்கள்

1 of 3
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி

03 Oct 2026 - 8:43 pm

3 mins read

லிட்டில் இந்தியாவில் இவ்வாண்டிற்கான தீபாவளிக் கொண்டாட்டங்கள் வண்ணமயமான அலங்காரங்கள், பாரம்பரியத் தமிழ் இசை அங்கங்கள், கலைநயமிக்க நடனங்கள் ஆகியவற்றுடன் களைகட்டத் தொடங்கிவிட்டன.

நிகழ்ச்சியில் பல்வேறு கலைப் படைப்புகள் பார்வையாளர்களை மகிழ்வித்தன.
நிகழ்ச்சியில் பல்வேறு கலைப் படைப்புகள் பார்வையாளர்களை மகிழ்வித்தன. - படம்: த.கவி
நிகழ்ச்சியை ‘டமாரு’ குழு பறையிசைப் படைப்புடன் தொடங்கிவைத்தது.
நிகழ்ச்சியை ‘டமாரு’ குழு பறையிசைப் படைப்புடன் தொடங்கிவைத்தது. - படம்: த.கவி

நவம்பர் 8ஆம் தேதி தீபாவளித் திருநாள். அதனை முன்னிட்டு சனிக்கிழமை (அக்டோபர் 3) லிட்டில் இந்தியாவின் பர்ச் ரோட்டில் இரவு 7 மணியிலிருந்து ‘தீபாவளித் திருவிழா’ ஒளியூட்டு நிகழ்ச்சி நடந்தேறியது.

அலங்கார விளக்குகள் இரவு 7.45 மணிக்கு ஒளியூட்டப்பட்டன.

நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“இத்தகைய கொண்டாட்டங்கள்வழி நமது பாரம்பரியம் உயிர்ப்புடன் தழைக்கிறது. அவற்றைத் தொடர்ந்து பாதுகாத்து, பகிர்ந்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது முக்கியம்.

“வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் இணைந்து இத்தகைய கொண்டாட்டங்களில் பங்கேற்கும்போது நமது பாரம்பரியங்கள் வலுவடைகின்றன,” என்றார் அவர்.

அவருடன் கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, வெளியுறவு, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான், நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஒவ்வோர் ஆண்டும் லிஷா ஏற்பாடு செய்யும் ஒளி அலங்காரங்கள் இவ்வாண்டு சீதையை ராமர் இலங்கையிலிருந்து மீட்டுவந்த வெற்றியைக் கருப்பொருளாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“கடந்த ஆண்டு உலகம் பல பூசல்களையும் சவால்களையும் சந்தித்துள்ளது. அவற்றைக் கடந்தும் வாழ்வில் நம்பிக்கை இருந்தால்தான் வெற்றியை நோக்கிச் செல்ல முடியும்.

“தீபாவளி என்பது இருள் நீங்கி வெளிச்சமும் நம்பிக்கையும் பிறக்கும் ஒரு விழாவாகக் கருதப்படுகிறது. ஆகையால், நம்பிக்கையின் எடுத்துக்காட்டாக விளங்கும் ராமர் கதையை அலங்காரக் கருப்பொருளாக்கலாம் என எண்ணினோம்,” என்றார் லிஷா துணைத் தலைவர் கீர்த்தி இராஜேந்திரன்.

ஒளியூட்டு நிகழ்ச்சியை உள்ளூர்த் தொலைக்காட்சிப் புகழ் ஜெய்னேஷ் ஈஸ்வரனும் வானொலிப் புகழ் ஹலீமா அஸ்மானும் தொகுத்து வழங்கினர்.

நிகழ்ச்சியில் இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலயங்களும் இணைந்து அதிபர் சவாலுக்கு $83,500 மதிப்புள்ள காசோலையை வழங்கின.

நிகழ்ச்சியில் இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலயங்களும் இணைந்து அதிபர் சவாலுக்கு $83,500 மதிப்புள்ள காசோலையை வழங்கின.
நிகழ்ச்சியில் இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலயங்களும் இணைந்து அதிபர் சவாலுக்கு $83,500 மதிப்புள்ள காசோலையை வழங்கின. - படம்: த.கவி

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை ‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள புதிய மரபுடைமை நடைப்பயணம் மக்களைக் கவருமென நம்பப்படுகிறது.

மெய்நிகர் கண்ணாடிகள்வழி 1800களில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம், லிட்டில் இந்தியா ஆர்க்கேட், தேக்கா சந்தை ஆகியவை எப்படி இருந்திருக்கக்கூடும் என்பதை மக்களால் கண்டுகளிக்க முடியும்.

அக்டோபர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதிவரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்திய மரபுடைமை நிலையத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறும்.

இவ்வாண்டு புதிதாக ‘லிட்டில் இந்தியா நிழற்படச் சவால்’ என்ற அங்கமும் அறிமுகமாகிறது.

அக்டோபர் 3ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அந்த அங்கத்தில், லிட்டில் இந்தியாவில் உள்ள 10 இடங்கள் ஒவ்வொரு வாரமும் மக்களுக்குச் சமூக ஊடகம்வழி தெரிவிக்கப்படும்.

அவ்விடங்களுக்குச் சென்று சிறந்த நிழற்படங்களை எடுக்கும் பங்கேற்பாளர்கள் குலுக்கல் முறையில் $150 வரையிலான பற்றுச்சீட்டுகளை வெல்லலாம்.

இந்தப் புதிய அம்சங்களுடன் மக்கள் குடும்பமாகப் பங்கேற்கப் பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பித்தளை விளக்குகளைச் செதுக்குதல், களிமண் விளக்குகளுக்குச் சாயம் தீட்டுதல், மசாலா கலவைப் பயிலரங்கு முதலியவை அவற்றுள் சில.

மேலும் இசை நிகழ்ச்சிகள், ‘பிக் பஸ்’ தீபாவளிச் சுற்றுலாக்கள், சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ நடவடிக்கைகள் முதலியவற்றுடன் வழக்கம்போல் தீபாவளிச் சந்தையும் உண்டு.

அவையெல்லாம் லிட்டில் இந்தியாவிற்கு அதிகமானோர் வருவதற்கு ஊக்குவிக்குமென நம்பிக்கை தெரிவித்தார் லிஷாவின் தலைவர் ரெகுநாத் சிவா.

நிகழ்ச்சிகள் குறித்த மேல் விவரங்களை அறிய மக்கள் deepavali.sg என்ற இணையதளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்