தீபாவளியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களும் பேருந்துகளும் கண்கவர் பண்டிகை அலங்காரங்களுடன் வலம்வரவிருக்கின்றன.
நிலப் போக்குவரத்து ஆணையம், ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம், இந்திய மரபுடைமை நிலையம் ஆகியவை இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
அக்டோபர் 11ஆம் தேதி வடகிழக்குப் பாதையில் செல்லும் ரயில்களில் தீபாவளி அலங்காரத்துக்கான அதிகாரபூர்வ திறப்பு விழா நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதில் போக்குவரத்துத் துணை அமைச்சர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் உள்ள அலங்காரங்கள் தீபாவளி குறித்த புரிதலை அனைவரிடமும் ஏற்படுத்துகின்றன. இது கலாசாரப் புரிதலை வளர்க்க சிறந்த வழியாகும்,” என்றார் அவர்.
‘குடும்ப ஒற்றுமை’ எனும் தீபாவளிக் கொண்டாட்டக் கருப்பொருளைப் பறைசாற்றும் பாரம்பரிய ரங்கோலி வடிவங்கள், தாமரை மலர்கள், மயில்கள், எண்ணெய் விளக்குகள், பாரம்பரிய தீபாவளி ஆடைகள் அணிந்த குடும்பத்தினர் உள்ளிட்ட துடிப்பான கலாசார சின்னங்கள் பொதுப் போக்குவரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நவம்பர் 14ஆம் தேதி வரை ஆறு ரயில் பாதைகளில் சேவை வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களிலும் பேருந்து சேவை எண்கள் 12, 30, 67, 147, 969 ஆகியவற்றிலும் இந்த அலங்காரங்கள் காணப்படும்.
சிராங்கூன் (வட்டப் பாதை), தெம்பனிஸ் (டௌன்டவுன் பாதை), தஞ்சோங் ரு (தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை), லிட்டில் இந்தியா (வடகிழக்கு/டௌன்டவுன் பாதை), புக்கிட் பாஞ்சாங் (டௌன்டவுன் பாதை) ஆகிய ரயில் நிலையங்களும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பண்டிகைக் காலங்களில் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் பயணிகளின் ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்கும் இந்த முயற்சி உதவுகிறது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.