தீபாவளி உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆடல் பாடல், அறுசுவை உணவு, அன்பர் உறவாடல் ஆகியவற்றுடன் ‘சிக்கி’ (SICCI) எனப்படும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையினர், அச்சபையின் நூற்றாண்டு வரலாற்றுப் பயணத்தைத் தீபாவளி இரவு விருந்துடன் கொண்டாடினர்.
சிங்கப்பூர் வர்த்தகக் களத்திற்கு ‘சிக்கி’ ஆற்றிய பங்கு, குறிப்பாக இந்தியச் சமூகத்தினரின் சிறிய, நடுத்தரத் தொழில்களுக்கு ஆதரவளித்தது நினைவுகூரப்பட்டது.
நிகழ்ச்சியைச் சிறப்பித்த துணைப் பிரதமர் கான் கிம் யோங்குடன் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், கல்வி, நிதி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் ஆகியோரும் வருகை அளித்திருந்தனர்.
ஷங்ரிலா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) நடைபெற்ற அந்த விருந்து நிகழ்ச்சியின்போது, ‘சிக்கி’யின் நூற்றாண்டுச் சாதனை நூல் வெளியீடு கண்டது.
மொத்தம் 172 பக்கங்கள் கொண்ட இந்நூல், 1924ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சிக்கி’யின் வரலாற்றை ஆவணப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அமைப்பைத் தொடங்கி வைத்த அமத்த புஜங்கிலால் மேத்தா முதலிய வர்த்தகத் தலைவர்களும் வழிவழியாக வந்தோரும் காட்டிய மீள்திறத்தாலும் மனவுறுதியாலும் அமைப்பு தொடர்ந்து தழைத்தோங்குகிறது என்று நிகழ்ச்சியில் உரையாற்றிய ‘சிக்கி’யின் தலைவர் நீல் பரேக் தெரிவித்தார்.
தமது உரையில் ‘சிக்கி’யின் எளிமையான தொடக்கக் காலத்தை நினைவுகூர்ந்த திரு பரேக், காலத்திற்கு ஏற்றவாறு இந்தத் தொழிற்சபை மாறி வருவதைச் சுட்டினார்.
“உலகமயமாதல், நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கமயமாதல் ஆகியவற்றின்மீது ‘சிக்கி’ கடப்பாடு கொண்டுள்ளது. உலகச் சந்தையில் சிங்கப்பூர் நிறுவனங்கள் தொடர்ந்து போட்டித்திறனுடன் செயல்பட சிக்கி தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்,” என்று திரு பரேக் உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே ‘சிக்கி’ முக்கியமான வகையில் பங்காற்றியுள்ளதாக திரு பரேக் கூறினார்.
“2025 சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் 60 ஆண்டு உறவின் நிறைவாண்டாக இருக்கும். இது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான, ஆழமான பங்காளித்துவ உறவைக் குறிக்கும்,” என்று அவர் கூறினார்.
கடந்த 100 ஆண்டுகளாக ‘சிக்கி’யின் வெற்றிக்குப் பங்களித்த தலைவர்களும் பாராட்டப்பட்டனர். கடந்த ஆண்டிலும் அதற்கு அப்பாற்பட்டும் மாறிவரும் வர்த்தகச் சூழலை எதிர்கொள்வதற்கான பல்வேறு திட்டங்களை அத்தொழிற்சபை தொடங்கவுள்ளது.
புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகவும் தற்போதைய நிறுவனங்களின் தொழில்நுட்ப உருமாற்றத்திற்காகவும் தொடங்கப்படும் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத் திட்டம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.