தீபாவளி: லிட்டில் இந்தியாவில் அதிகக் கூட்டம் எதிர்பார்ப்பு

தீபாவளி: லிட்டில் இந்தியாவில் அதிகக் கூட்டம் எதிர்பார்ப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Nov 2026 - 4:55 pm

2 mins read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முக்கியமாகச் சனிக்கிழமை (நவம்பர் 7) பண்டிகைக்கு முதல்நாள் மாலையில் லிட்டில் இந்தியா வட்டாரத்திற்குச் செல்வோர் அதிகக் கூட்டத்தை எதிர்பார்க்கலாம்.

இக்காலகட்டத்தில் சிராங்கூன் ரோட்டில் பாதசாரிகள், வாகனங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்று காவல்துறை கூறியது. மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஆலோசனைக் குறிப்பில் வாகன ஓட்டிகளை அது கேட்டுக்கொண்டது.

அங்கூலியா பள்ளிவாசலுக்கு முன்னால், பர்ச் ரோட்டில் பாதசாரிகள் கடந்துசெல்வதற்கான தடம், நவம்பர் 7ஆம் தேதி மாலை 4 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிவரை மூடப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.

கிச்சனர் லிங்க் அல்லது பாபூ லேன் அருகில் உள்ள பாதசாரிகளுக்கான மாற்றுத் தடங்களை அவர்கள் பயன்படுத்தலாம்.

தேவைப்பட்டால் கேம்பல் லேனில், பாதசாரிகளுக்கான தடமும் மூடப்படலாம்; அத்தகைய சூழலில் சுங்கை ரோடு அல்லது டன்லப் ஸ்திரீட் அருகில் உள்ள மாற்றுத் தடங்கள் பயன்பாட்டில் இருக்கும்

சாலைகளைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பிற்காகக் கூட்டத்தையும் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் காவல்துறை கூறியது.

நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தவும் உதவி வழங்கவும் வழிகாட்டிப் பலகைகளுடன் துணைக் காவல்துறை அதிகாரிகளும் களத்தில் பணியில் இருப்பார்கள்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் உடைமைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மதுபானக் கட்டுப்பாட்டு வட்டாரங்களான லிட்டில் இந்தியாவிலும் கேலாங்கிலும் நவம்பர் 6ஆம் தேதி இரவு 10:30 மணி முதல் நவம்பர் 10ஆம் தேதி காலை 7 மணி வரை பொது இடங்களில் மது அருந்த அனுமதி இல்லை.

முதன்முறை சட்டத்தை மீறுவோருக்கு $1,500 வரை அபராதம் விதிக்கப்படக்கூடும். மீண்டும் குற்றம் புரிவோர்க்கு $3,000 வரை அபராதம் அல்லது 4½ மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

அனுமதிக்கப்பட்ட வர்த்தக நேரத்தைத் தாண்டி மது விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்கள் மதுபான உரிமத்தை இழக்கும் அபாயம் உள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

பட்டாசுகளைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்வது, வைத்திருப்பது, வெடிப்பது குறித்தும் காவல்துறை எச்சரித்துள்ளது.

அத்தகையோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்