தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளி வார இறுதி: லிட்டில் இந்தியாவில் சாலை மூடல்

2 mins read
b0b90a5e-714b-4c1b-b5e6-502beb4bf1f5
ஹேஸ்டிங்ஸ் ரோடு, கிளைவ் ஸ்திரீட், சிராங்கூன் ரோடு ஆகிய சாலைகளில் விதிகளைமீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. - படம்: த.கவி
multi-img1 of 2

இந்த தீபாவளி வார இறுதியின்போது லிட்டில் இந்தியா வட்டாரத்தில் பெரிய அளவில் கூட்டம் திரளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அதிக கூட்டம் கூடலாம் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சிராங்கூன் சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல், மக்கள் கூட்டம் இரண்டும் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது. அதனால் தீபாவளி வார இறுதியில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அது வாகன ஓட்டிகளைக் கேட்டுக்கொண்டது.

கூட்டத்தையும் போக்குவரத்து நெரிசலையும் சமாளிக்க அங்குலியா பள்ளிவாசலுக்கு முன்னால் இருக்கும் பெர்ச் ரோடு பாதசாரி சாலைக் கடப்பு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நான்கு மணியிலிருந்து திங்கட்கிழமைவரை மூடப்படும். பாதசாரிகள் அருகில் கிட்சனர் லிங்க் அல்லது பாபு லேன் சாலைக் கடப்புகளைப் பயன்படுத்தலாம்.

தேவைப்பட்டால் கேம்பல் லேன் சாலைக் கடப்பும் மூடப்படும் என்று காவல்துறை தெரிவித்தது. அப்படி அது மூடப்பட்டால் பாதசாரிகள் சுங்கை ரோடு அல்லது டன்லப் ஸ்திரீட் சாலைக் கடப்புகளைப் பயன்படுத்தலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியது.

“லிட்டில் இந்தியாவிற்கு வருபவர்கள் விதிகளுக்குப் புறம்பாக வாகனங்களை நிறுத்துவதால் நெரிசல் ஏற்படுவதுடன் மற்றவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. ஹேஸ்டிங்ஸ் ரோடு, கிளைவ் ஸ்திரீட், சிராங்கூன் ரோடு ஆகிய சாலைகளில் அவ்வாறு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனைத் தவிர்க்க வேண்டும்,” என்று லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத் தலைவர் ரெகுநாத் சிவா கேட்டுக்கொண்டுள்ளார்.

“வாகனம் நிறுத்த விரும்புபவர்கள் தேக்கா பிளேசிலும் தேக்கா சந்தையிலும் நிறுத்தலாம். அங்கு நிறைய இடம் உள்ளது. அவற்றுக்குச் சிறப்புக் கட்டணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்ற அவர், அவற்றைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் அடுத்த இரு நாள்களுக்குப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் அவர் ஊக்குவித்தார்.

பாதசாரிகளை வழிநடத்தும் வகையில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும். மேலும் உதவி வழங்க துணை காவல்துறை அதிகாரிகளும் உடனிருப்பார்கள்.

மக்கள் விழிப்புடன் இருக்கவும், தங்கள் உடைமைகளைக் கவனித்துக் கொள்ளவும், முன்பக்கத்தில் தங்கள் தோல்பைகளை வைத்துக்கொள்ளவும், காற்சட்டையின் பின் பைகளில் பணப்பைகளை வைப்பதைத் தவிர்க்கவும் காவல்துறை அறிவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்