நியூயார்க்: அண்மையில் சீனாவின் டீப்சீக் (Deepseek) நிறுவனம் வெளியிட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தாமல் தடுக்க உலகின் ஏராளமான நிறுவனங்களும் அரசாங்க அமைப்புகளும் முயற்சி எடுத்து வருகின்றன.
கணினிக் கட்டமைப்புகளைப் பாதுகாக்க அமர்த்தப்பட்ட இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள் இத்தகவலை வெளிப்படுத்தி உள்ளன.
தங்களது ஊழியர்கள் சீனாவின் டீப்சீக்கை அணுகாதவாறு தடுப்பதற்கான முயற்சிகளை நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், குறிப்பாக அரசாங்கங்களுடன் தொடர்பில் உள்ள அமைப்புகள் எடுத்துள்ளதாக அவை கூறியுள்ளன.
அந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாக தரவுகள் கசிந்து சீன அரசாங்கத்திற்குச் செல்லக்கூடிய ஆபத்து இருப்பதாலும் பலவீன ரகசியப் பாதுகாப்பு அம்சங்கள் அதில் இருப்பதாலும் அந்த ஏற்பாடுகளை நிறுவனங்கள் எடுத்துள்ளதாக ஆர்மிஸ் (Armis) என்னும் இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி நாடில் இஸ்ரேல் கூறினார்.
ஊழியர்களின் இணையத்தளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் நெட்ஸ்கோப் (Netskope) என்னும் இணையப் பாதுகாப்புக் கருவியைப் பயன்படுத்துகின்றன. தற்போது அத்தகைய நிறுவனங்கள் டீப்சீக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அந்தக் கருவியின் சேவைகளைப் பயன்படுத்த முயல்கின்றன. டீப்சீக் தடுப்புச் சேவைகளுள் அதுவும் அடங்கும்
அண்மையில் ஆர்மிஸ் நிறுவனத்தின் 70 விழுக்காட்டு வாடிக்கையாளர்களும் நெட்ஸ்கோப்பின் 52 விழுக்காட்டு வாடிக்கையாளர்களும் புதிய செயற்கை நுண்ணறிவுத் தளத்தைத் தடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்தத் தகவலை அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகள் வெளிப்படுத்தி உள்ளனர்.
“செயற்கை நுண்ணறிவு வாயிலாக தரவுகள் சீன அரசாங்கத்திற்கு சென்றுவிடுமோ என்பதே தற்போது எழுந்திருக்கும் பெருங்கவலை. உங்களது தகவல்கள் எங்கு செல்கின்றன என்பது உங்களுக்கே தெரியாது,” என்று கூறுகிறார் திரு இஸ்ரேல்.
அமெரிக்காவின் சாட்ஜிபிடி (ChatGPT), சீனாவின் டீப்சீக் என இரண்டுமே நாம் அனுப்பும் தரவுகளை மனிதர்களை போல புரிந்து கொண்டு அதற்கேற்பப் பதிலளிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த இரண்டையும் செயலியாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் அல்லது நேரடியாக அவற்றின் இணையத்தளத்திலும் பயன்படுத்தலாம்.
தற்போது உலகளவில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்படும் செயற்கை நுண்ணறிவுக் கருவியாக டீப் சீக் உருவெடுத்து உள்ளது. அது அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவசச் செயலியாகவும் டீப்சீக் மாறியுள்ளது.