புக்கிட் தீமா விரைவுச்சாலைக்கு (பிகேஇ) அருகே நின்ற சம்பார் வகை மான் ஒன்று சிகிச்சையளிக்கப்பட்டு மறுநாள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அருகே விடுவிக்கப்பட்டது.
அந்த மான் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) தெற்கு நோக்கிய புக்கிட் தீமா விரைவுச்சாலையில் கிராஞ்சி விரைவுச்சாலை நுழைவாயிலுக்குப் பிறகு மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதிகாரிகளை அழைத்தார்.
அந்த மானை மீட்கும் நடவடிக்கை காணொளியில் பதிவுசெய்யப்பட்டது. அந்தக் காணொளி சிங்கப்பூர் வைல்ட்லைஃப் சைட்டிங்ஸ் ஃபேஸ்புக்கில் அன்றே பதிவேற்றம் செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட மானைப் பற்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் தேசிய பூங்காக் கழகத்துக்குத் தகவல் கிடைத்ததாக அக்கழகமும் மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் பாதுகாப்புப் பிரிவான மண்டாய் நேச்சரும் திங்கட்கிழமை (நவம்பர் 9) ஊடகங்களிடம் கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன. மானுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் உடலில் சத்துக்குறைபாடும் நீர்ச்சத்து குறைவும் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு அந்த மானை தேசிய பூங்காக் கழகம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் விடுவித்தது.
