தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம்

தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம்

1 mins read
13வது பெய்ஜிங் சியாங்ஷான் கருத்தரங்கில் கலந்துகொள்கிறார்
7b4945df-1886-482b-abbd-f084bc2625a6
13வது பெய்ஜிங் சியாங்ஷான் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சீனா செல்லும் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சீனா செல்கிறார்.

சீனாவின் தேசியத் தற்காப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுனின் அழைப்பை ஏற்று, 13வது பெய்ஜிங் சியாங்ஷான் கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர் அங்குச் செல்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, அவர் அமைச்சர் டோங் ஜுனையும் பிற சீனத் தலைவர்களையும் சந்திப்பார். மேலும், 13வது பெய்ஜிங் சியாங்ஷான் கருத்தரங்கிலும் திரு சான் உரையாற்றுவார்.

சீன ராணுவ அறிவியல் சங்கமும் அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுகளுக்கான சீனக் கல்விக்கழகமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்துகின்றன. இதில் உலகெங்கிலுமிருந்து தற்காப்பு, ராணுவம், வெளியுறவு ஆகிய துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்வர். வட்டார, அனைத்துலகப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடுவர்.

‘நிலைத்தன்மை குறித்து இணக்கம் காண்போம், பாதுகாப்பு நிர்வாகத்தை ஒன்றாக முன்னெடுப்போம்' என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும். அமைச்சர் சானின் இந்தப் பயணம், சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே நிலவிவரும் நீண்டகால, நட்பார்ந்த தற்காப்பு உறவை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
தற்காப்புஅமைச்சர்சான் சுன் சிங்சீனாபயணம்