காடுகளை அழிப்பதால் தென்கிழக்காசியாவில் ஏற்படும் வெப்பம், அதிக மக்களை உயிரிழக்கவைக்கிறது. ஆப்பிரிக்காவின் காங்கோ, தென் அமெரிக்காவின் அமேசான் போன்ற வெப்பமண்டலக் காடுகள் அழிக்கப்பட்டதில் இழந்த காடுகளின் அளவை விட தென்கிழக்காசியாவில் தீக்கிரையான காடுகள் குறைவாகும். இதனால் ஏற்படும் மரண எண்ணிக்கை கூடியுள்ளதாக பிரிட்டனின் கல்விக் கழகத் தலைமையிலான அண்மைய ஆய்வு கண்டறிந்துள்ளது.
தென்கிழக்காசியாவில் ஆண்டுதோறும் கிராமப்புறங்களில் வாழும் 15,680 பேர் காடுகள் அழிவதால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளால் உயிரிழக்கின்றனர். இதனை ஒப்பிடுகையில் ஆப்பிரிக்காவில் வெப்ப மண்டலங்களில் வாழும் 9,890 பேர் இதே காரணங்களால் மரணமடைகின்றனர். தென் அமெரிக்காவின் எண்ணிக்கை 2,520 என்று அறியப்படுகிறது.
இதனை உறுதிசெய்யும் விதமாக, தென்கிழக்காசியாவில் 2001 முதல் 2020 வரையில் 490,000 சதுர கி.மீட்டர் அளவு தாவர நிலம் எரியூட்டப்பட்டு அழிந்தது. அதே காலகட்டத்தில் தென் அமெரிக்காவின் மத்திய, தென் பகுதி வெப்ப மண்டலங்கள் 760,000 சதுர கி.மீட்டர் அளவு காட்டு நிலங்களை இழந்துள்ளது.
இதற்கான காரணம், தென் கிழக்காசியாவில் அழிவுற்றக் காட்டுப் பகுதிகளில் அதிக மக்கள் வாழ்கின்றனர். அதனால் வெப்பம் அதிகரித்து சுகாதார சீர்குலைவுக்கு வழிவகுக்கிறது. அதிக காடுகளை இழந்தாலும் தென் அமெரிக்காவில் இந்த நிலை இல்லை. இதனை அந்த ஆய்வைத் தலைமை ஏற்று வழிநடத்திய லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கார்லி ரெடிங்டன் தெரிவித்தார்.
ஆய்வு முடிவுகள் இயற்கை பருவநிலை மாற்றம் பற்றிய அறிவியல் சஞ்சிகை ஒன்றில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் பருவநிலை மாற்றம் தென்கிழக்காசியாவின் வெப்பநிலையை 0.72 டிகிரி செல்சியஸுக்கு அதிகரித்துள்ளதையும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
காடுகளைச் சார்ந்து வாழும் மக்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பை எதிர்கொள்ளத் தேவையான கட்டமைப்புகள் இல்லாமையும் மரணங்களுக்கான முக்கிய காரணமாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.