செந்தோசாவின் கடற்கரைகளில் இருக்கக்கூடிய இ.கோலை (E.coli) கிருமி அளவை தேசிய சுற்றுப்புற அமைப்பு கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.
செந்தோசா கடற்பகுதியில் அந்தக் கிருமி அதிக அளவில் இருந்ததால் உலக நீர் விளையாட்டுப் போட்டிகள் இருமுறை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைப்பு இந்நடவடிக்கையை எடுக்கிறது.
தேசிய சுற்றப்புற அமைப்பு பொதுவாக இ.கோலை சோதனைகளைக் கடல் நீர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளாது. மாறாக, உலகச் சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டிகளின்படி என்டெரொகாக்கஸ் (Enterococcus) எனும் மற்றொரு கிருமி வகைக்கான சோதனைகளை அமைப்பு மேற்கொள்ளும். நீர்க் கேளிக்கை விளையாட்டுகளுக்கு ஒரு கடற்கரை உகந்ததா என்பதை நிர்ணயிக்க அச்சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“தேசிய சுற்றுப்புற அமைப்பு என்டெரொக்கொக்கஸ் கிருமியை அடையாளம் காண கடல் நீரைத் தொடர்ந்து கண்காணிக்கும். அதேவேளை, அண்மையில் தலைதூக்கிய விவகாரத்தையடுத்து இப்போது செந்தோசா கடற்கரைகளில் இ.கோலை அளவையும் நாங்கள் கண்காணித்துவருகிறோம்,” என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) செந்தோசாவில் இ.கோலை அளவு குறைவாக இருந்ததாகவும் அடுத்த சில நாள்கள் நீரின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அமைப்பு குறிப்பிட்டது.
நீரில் இ.கோலை அளவு அதிகரித்ததற்கான காரணம் தெரியவில்லை. அக்கிருமி பொதுவாக மனிதர்கள், விலங்குகளின் குடல்களில் காணப்படும்.