டிலிவரூ உணவு விநியோகத் தளம், வரும் மார்ச் 4ஆம் தேதிக்குப் பிறகு சிங்கப்பூரில் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.
தங்கள் இணையத்தளத்தில் அறிக்கை மூலம் டிலிவிரூ இதனைத் தெரிவித்தது.
“இது கடினமான முடிவாகும். அந்தந்த நாடுகளின் சந்தை நிலவரத்தை மறுஆய்வு செய்த பிறகும் நீண்டகாலம் நல்ல தலைமைத்துவம் இருப்பது, நீடித்து நிற்க வகைசெய்யும் விதத்தில் செயல்படுவது ஆகியவை குறித்தும் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தும் நோக்கத்திலும் எடுக்கப்பட்ட முடிவாகும்,” என்று டிலிவரூ நிறுவனம் குறிப்பிட்டது.
“கடந்த 11 ஆண்டுகளில் சிங்கப்பூரின் உணவு விநியோகத் துறையை வடிவமைக்கப் பங்காற்றியதில் பெருமை கொள்கிறோம். அதன் மூலம் பல்வேறு உணவகங்களையும் மளிகைக் கடைகளையும் வாடிக்கையாளர்களைச் சென்றடையச் செய்துள்ளோம்,” என்று டிலிவரூ தலைமை நிர்வாகியும் டோர்டேஷ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான மிக்கி கூசி கூறினார்.
“எங்களுடன் இந்தப் பயணத்தில் இடம்பெற்று ஆதரவளித்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்காளிகள், விநியோக ஓட்டுநர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார் அவர்.
டிலிவரூ தளம் வரும் மார்ச் மாதம் நான்காம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இந்த மாற்றத்தின்போது தங்கள் வாடிக்கையாளர்கள், பங்காளிகள், ஓட்டுநர்களுக்கு ஆதரவளிக்க உள்ளூர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றப்போவதாக டிலிவரூ சொன்னது.
“இது எளிதான முடிவல்ல, சாதாரணமானதும் அல்ல. நமது வாடிக்கையாளர்கள், பங்காளிகள், ஓட்டுநர்கள் ஆகியோருக்குத் தரமான சேவையை வழங்குவதில்தான் எங்கள் கவனம் இருந்து வந்துள்ளது.
“சிங்கப்பூரில் கடந்த 11 ஆண்டுகளில் நாம் சாதித்ததை எண்ணிப் பெருமைகொள்கிறோம்,” என்று வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் டிலிவரூ வருத்தம் தெரிவித்துக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
இன்னும் பயன்படுத்தப்படாத பரிசு அட்டைகள், சலுகைப் புள்ளிகள் ஆகியவற்றை மார்ச் மாதம் நான்காம் தேதி பிற்பகல் மூன்று மணிக்குள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என்று டிலிவரூ குறிப்பிட்டது. மார்ச் நான்காம் தேதி பிற்பகல் மூன்று மணி வரை டிலிவரூ ஓட்டுநர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடலாம் என்றும் அது தெரிவித்தது.

