விநியோக மையத் திட்டம் அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, செப்டம்பர் 9ஆம் தேதியிலிருந்து 50க்கும் மேற்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாகன நிறுத்துமிடங்களில் விநியோக நிறுவனங்கள் அவற்றின் வாகனங்களை நிறுத்திவைப்பதற்கான இடங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 2021ஆம் ஆண்டிலும் 2022ஆம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிமுகத் திட்டத்தின்கீழ் விநியோக நிறுவனங்களுக்கு சில வீவக அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அவ்விடங்களில் பொட்டலங்களை இறக்கிவைப்பது, அவற்றை அடுக்கிவைப்பது, பொட்டலங்களை விநியோகம் செய்யும் ஊழியர்களிடம் அவற்றை ஒப்படைப்பது போன்ற பணிகளில் விநியோக நிறுவனங்கள் ஈடுபடலாம்.
“இத்திட்டம் மூலம் விநியோக வாகனங்களின் பயணங்கள் குறையும். விநியோக ஓட்டுநர்களின் பயண நேரத்தைக் குறைக்க இது உதவும். விநியோகச் சேவை துரிதமாக நடைபெறவும் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கவும் இத்திட்டம் வகை செய்கிறது,” என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் மற்றும் வீவக வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
வீவக வாகன நிறுத்துமிடத்தில் பொட்டலங்களை அடுக்கிவைக்கவும் அவற்றைக் கையாளவும் விநியோக ஊழியர்களுக்குப் பாதுகாப்பான இடத்தை இந்த அறிமுகத் திட்டம் வழங்குவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.