வாகன நிறுத்துமிட யோசனைக்கு விநியோக ஓட்டுநர்கள் வரவேற்பு

வாகன நிறுத்துமிட யோசனைக்கு விநியோக ஓட்டுநர்கள் வரவேற்பு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Sep 2026 - 7:44 pm

2 mins read

கொண்டோமினியக் குடியிருப்பு வளாகங்களிலும் கடைத்தொகுதிகளிலும் தனித்துவ வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கான பெட்டிகள் அமைப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை விநியோக ஓட்டுநர்கள் வரவேற்றுள்ளனர்.

இருப்பினும், நிபுணர்களும் கொண்டோமினிய நிர்வாகத்தினரும் வேறு மாதிரியான கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

செலவு, பாதுகாப்பு, குடியிருப்பாளர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவை இதில் சவால்களாக அமையக்கூடும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் பேசிய விநியோக ஓட்டுநர்கள்,

நிலப் போக்குவரத்து ஆணையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் இணைந்து வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டிக் குறிப்புகள், உணவு அல்லது பொருள்களை விநியோகிக்கச் செல்லும்போது தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க உதவும் என்று கூறினர்.

‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் பேசிய 34 வயதான விநியோக ஓட்டுநர் மிகா கோர், விநியோகப் பணிக்காகச் செல்லும்போது தமது மின்சைக்கிளை பெரும்பாலும் கொண்டோமினிய வளாகங்களுக்கு அருகே உள்ள பொதுப் பாதையிலேயே நிறுத்துவதாகக் கூறினார்.

சட்டவிரோதமாக அதனை நிறுத்துவதால் அபராதம் விதிக்கப்படலாம் என்ற அச்சம் இருந்தாலும், அந்த அபாயத்தை அந்தப் பெண்மணி ஏற்றுக்கொள்கிறார்.

காரணம், வளாகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு, வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கு நடந்து செல்வது அதிக சிரமத்தையும், எட்டு நிமிடங்கள் வரையிலான கூடுதல் நேரத்தையும் அவர் சந்திக்க வேண்டியுள்ளது.

மேலும், கொண்டோமினிய வளாகத்தின் ‘இண்டர்காம்’ மூலம் அழைக்கும்போது பல வாடிக்கையாளர்கள் அழைப்பை ஏற்பதில்லை. அதனால் அவர் வெளியே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

வேறு வழியின்றி, வளாகத்திற்குள் நுழையும் அல்லது வெளியேறும் ஒரு குடியிருப்பாளரைப் பின்தொடர்ந்து உள்ளே செல்ல வேண்டியுள்ளது. இது தமது நேரத்தை வீணாக்குகிறது என்று திருவாட்டி கோர் குறிப்பிட்டார்.

பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் மையங்கள் நிறுவபட்டால் அவை தம்மைப் போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
விநியோகம்ஓட்டுநர்வாகன நிறுத்துமிடம்