வீடுகள் வாங்க விரும்புவோரின் வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) சிஎன்ஏ ஊடகத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அந்தத் தேவை அதிகரிப்பைக் கையாள விரைவாகவும் அதிக அளவிலும் அவ்வகை வீடுகளை சிங்கப்பூர் தொடர்ந்து கட்டி முடிக்கும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளையில் வழக்கமான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுடன் மறுவிற்பனை வீடுகளும் அதிகம் விற்பனைக்கு இருப்பது வீட்டு விலைகளை நிலைப்படுத்த உதவும் என்றும் அவர் கருத்துரைத்தார்.
அரசாங்கம் 2025 முதல் 2027ஆம் ஆண்டுவரை 55,000 புதிய பிடிஓ வீடுகளைக் கட்டி விற்பனைக்கு விடவும் தேவை ஏற்பட்டால் அந்த எண்ணிக்கையைக் கடந்து வீடுகளை வழங்கவும் தயாராக உள்ளது.
“நாம் அதனைத் தான் செய்யப்போகிறோம்,” என்று தாம் எண்ணுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மறுவிற்பனை வீட்டு விலைகள் நிலையாகவே இருக்கும்
வீடு வாங்குவோரின் வருமான வரம்பு உயர்த்தப்படுவதால், மறுவிற்பனை வீட்டுச் சந்தையிலும் அதன் விளைவுகள் உணரப்படும்.
அதிகமானோர் பிடிஓ வீடுகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறும் அதே நேரத்தில் மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை திசை திரும்ப வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும் மறுவிற்பனை வீடுகளின் குறைந்தபட்ச குடியிருப்பு காலம் (எம்ஓபி) பல வீடுகளுக்கு முடிவுறும் என்பதால் அதிக அளவில் அவ்வகை வீடுகள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் வருமான வரம்பின் உயர்வு, மறுவிற்பனை வீடுகளின் அளவு அதிகரிப்பு ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்து மறுவிற்பனை விலைகளை சீராக வைத்திருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் சீ தெரிவித்தார்.
மறுவிற்பனை வீட்டு விலைகள் சீராக இருப்பதால்தான் தனியார் சொத்துகளை விற்பனை செய்தோர் 15 மாத காலம் காத்திருந்து வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்கும் விதிமுறையை அரசாங்கம் கடந்த மாதம் அகற்றியது என்று அவர் குறிப்பிட்டார்.


