சிங்கப்பூரிலுள்ள 14 துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் புதிய முதுமைக்கால மறதி நோய்த் தடுப்புத் திட்டம் அறிமுகம் காணவுள்ளது. இத்திட்டத்தால் 800 முதியவர்கள் பயன் அடையவுள்ளனர்.
‘இம்ப்ரெஸ் மைண்ட்2எஸ்’ என்ற திட்டம், அடுத்த நான்கு ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். துடிப்புமிக்க, நம்பிக்கைமிகு மூப்படைதலுக்கான தேசிய புத்தாக்கச் சவால் மானியத்திலிருந்து அது 3 மில்லியன் வெள்ளி நிதியைப் பெறுகிறது.
ரெட்ஹில் வட்டாரத்திலுள்ள என்டியுசி ஹெல்த் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் திட்டம் தொடங்கவுள்ளது. அங்கு இந்தத் திட்டத்தின்வழியாக 60 முதியவர்கள் பயனடையவுள்ளனர்.
சிங்ஹெல்த் சுகாதாரக் குழுமத்தால் தொடங்கப்பட்ட இந்த் திட்டத்தைச் சுகாதார மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ், மே 30ஆம் தேதியன்று சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் நடைபெற்ற சிங்ஹெல்த் சமூகக் கருத்தரங்கில் அறிவித்தார்.
தை ஹுவா குவான் அறநிறுவனம், மான்ஃபோர்டு கேர், என்டியுசி ஹெல்த், அல்கின் சிங்கப்பூர் ஆகிய நிறுவனங்களுடன் சிங்ஹெல்த் சமூக பங்காளிகளுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ், புலன் ரீதியான பாதிப்பு சிறிதளவு கொண்டுள்ளோரை சமூக தாதியர்கள் சோதனைகள் வழியாகக் கண்டுபிடிப்பர்.
பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட முதியோரில் சிலருக்குத் தனிப்பட்ட சுகாதார பயிற்றுவிப்புகள் தரப்படும். உணவு, உடற்பயிற்சி, மன உளைச்சல் கட்டுப்பாடு, தூக்க நிர்வாகம் போன்றவற்றை முறையாகக் கையாள முதியோர்க்கு இந்தத் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் கற்றுத்தரப்படும்.
மூத்தோரின் நினைவாற்றலையும் செயல்திறனையும் மேம்படுத்தும் சில்வர்பேடுகள் என்ற சாதனங்களைப் பயன்படுத்தவும் முதியவர்கள் வாய்ப்பினைப் பெறுவர்.
தொடர்புடைய செய்திகள்
மூத்தோர் மட்டுமின்றி அவர்களது பராமரிப்பாளர்களுக்கும் ஆதரவையும் பயிற்சியையும் பெறுவர். பராமரிப்பளார்களின் பாரத்தைக் குறைப்பதற்கான ஆதரவுக் குழு முன்மொழிவுகள், இத்தகைய ஆதரவுகளில் ஒன்று.
2023ல் வெளிவந்த சிங்கப்பூர் முதியோர் நலன் பற்றிய ஆய்வின்படி 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோரில் 11 பேரில் ஒருவருக்கு முதுமை மறதிக்கால நோய் இருப்பதாகத் திரு டான் சுட்டினார்.
ஆரோக்கியத்திற்கான திட்டத்தைத் தாண்டி தனிநபர்கள் ஒவ்வொருவருக்கும் வடிவமைக்கப்பட்ட முறையாகும் என்பதையும் திரு டான் வலியுறுத்தினார்.
மூத்தோரின் அன்றாட வழக்கங்களுடன் இயல்பாகப் பொருந்தும் தன்மையால் இந்தத் திட்டம், மற்ற திட்டங்களுடன் மாறுபடுகிறது என்று அவர் கூறினார்.


