குறைந்த அளவிலிருந்து நடுநிலை அளவு மறதிநோய் உள்ளவர்களுக்கான சமூக ஆதரவுத் திட்டம் ஒன்று தீவு முழுவதும் ஏழு நிலையங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2028ஆம் ஆண்டுக்குள் 1,200க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு ஆதரவளிப்பது இந்நடவடிக்கையின் இலக்கு.
உணர், அனுபவத் திறன் பயன்முறைத் திட்டத்தை (சிஐபி) ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு தொடங்கியது. தொடக்கக் கட்டமாக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இரு நிலையங்களில் 120க்கும் அதிகமானோரைக் கொண்டு திட்டம் சோதிக்கப்பட்டதையடுத்து இப்போது விரிவுபடுத்தப்படுகிறது.
வாரந்தோறும் அமர்வுகள் மூலம் வழங்கப்படும் இரண்டு மாதகாலத் திட்டத்தில் பங்கேற்றோரில் 85 விழுக்காட்டினருக்கும் மேலானோரின் உணர், அனுபவத் திறன் (cognitive) மதிப்பீடுகள் அதே நிலையில் இருந்தன அல்லது மேம்பட்டன. தங்களின் மனநிலை மேம்பட்டதாக 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தெரிவித்தனர்.
2025ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து சிங்கப்பூர் மறதிநோய் அமைப்பு நடத்தும் நோங்-என் பராமரிப்பு நிலையம், என்டியுசி ஹெல்த் ஆகியவற்றில் சிஐபி திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் ஆரம்ப சோதனைக் கட்டத்தில் சிங்கப்பூர் மறதிநோய் அமைப்பும் ஈடுபட்டிருந்தது.
பங்கேற்பாளர்கள் தங்களின் உணர் மற்றும் அனுபவத் திறன், உடல்ரீதியான ஆற்றல், பிறருடன் பழகும் ஆற்றல் ஆகியவற்றை அதே நிலையில் வைத்திருக்க அல்லது மேம்படுத்திக்கொள்வதற்கான திட்டமிடப்பட்ட, பன்முக நடவடிக்கைகளையும் சிஐபி திட்டம் வழங்குகிறது.
ஒவ்வொரு பங்கேற்பாளரின் ஆற்றல், விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. நினைவாற்றல் விளையாட்டுகள், நடனம், ஓவியக் கலைகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
ஒவ்வோர் அமர்விலும் பயிற்சி பெற்ற ஊழியர் ஒருவர், அதிகபட்சமாக நான்கு பங்கேற்பாளர்களைக் கவனித்துக்கொள்வார்.
தொடர்புடைய செய்திகள்
ஏழு வாரங்களுக்கு திட்டம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் மூன்று மணிநேரம் நீடிக்கும் இரு அமர்வுகள் இருக்கும்.
பிறகு தங்கள் ‘நிலை’யை அப்படியே தொடர்ந்து இருக்கச் செய்ய பங்கேற்பாளர்கள் 26 வாரங்களுக்கான கூடுதல் அமர்வுகளைத் தெரிவுசெய்துகொள்ளலாம். ஆரம்பக் கட்டத்தில் கிடைத்த தேர்ச்சியை நிலைநாட்ட உதவ இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தை நிறைவேற்றிய பிறகு வாடிக்கையாளர்களின் ஆற்றல் ஆராயப்பட்டு அவரவருக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும். அதோடு, சுகாதாரப் பராமரிப்பாளர்கள் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பர்.
சிங்கப்பூர் சமூகம் மூப்படைந்துவரும் நிலையில் மறதிநோய்ச் சம்பவங்கள் கணிசமான அளவு அதிகரித்தும் வருகின்றன. இத்தகைய சூழலில் இந்த ஏற்பாடு இடம்பெற்றுள்ளது.
60 வயதைத் தாண்டியோரில் கிட்டத்தட்ட 74,000 பேர் 2023ஆம் ஆண்டு முதல் மறதிநோயுடன் வாழ்ந்து வருவதாக மனநலக் கழகம் நடத்திய ‘சிங்கப்பூர் மூத்தோரின் நலன்’ எனும் ஆய்வில் தெரிய வந்தது. இந்த எண்ணிக்கை, 2030ஆம் ஆண்டுக்குள் 152,000க்கு அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சு கணித்துள்ளது.

