டெம்ஸி பகுதியின் திறந்த வெளிப் பண்ணை உணவகம் மூடப்படுகிறது

1 mins read
89f091bd-a87f-4de5-a57e-fa73972c4424
கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்த ‘ஓபன் ஃபார்ம் கம்யூனிட்டி’ என்ற உணவகம், ஜனவரி மாதம் 11ஆம் தேதி மூடப்படவுள்ளது. - படம்: ஓபன் ஃபார்ம் கம்யூனிட்டி உணவகம்

சிங்கப்பூரில் பத்தாண்டுகளாகச் செயல்பட்டுவந்த உன்னத உணவகம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி அதன் கதவுகளை நிரந்தரமாக மூடவுள்ளது என்று புதன்கிழமை (ஜனவரி 7) அறிவித்துள்ளது.

டெம்ஸி ரோட்டில் உள்ள உணவகங்களில் ஒன்றான ‘ஓபன் ஃபார்ம் கம்யூனிட்டி’ ஒரு திறந்தவெளிப் பண்ணையில் அமர்ந்து அங்கேயே விளைந்த காய்கறிகளையும் இதர உணவுகளையும் பல சுவைகளுடன் அனுபவித்து உண்ணும் உணர்வை வழங்கிவந்தது.

உள்நாட்டில் விவசாயமும் அறுவடையும் செய்து, உணவகத்தில் சமையலுக்கு ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டது. மற்றொரு பாகம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

எவ்விதக் காரணங்களையும் குறிப்பிடாமல், உணவகம் மூடப்படும் செய்தியை நிறுவனம் அதன் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டகிராமிலும் பதிவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு, சிங்கப்பூரின் புறநகர்ப் பண்ணையில் விளைந்த உணவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரே உணவகமாக அது திகழ்ந்தது.

டெம்ஸியில் பல உணவகங்களின் எல்லை அருகே உள்ள மின்டன் ரோட்டில் 35,000 சதுர அடி நிலத்தில் தோட்டங்களுடன் சிறந்த உணவருந்தும் இடமாக ஓபன் ஃபார்ம் கம்யூனிட்டி விளங்கியது.

அதன் தோட்டத்தையும் விவசாயத்தையும் பார்வையிடச் சுற்றுலாக்கள் அடிக்கடி நடந்துள்ளன. பல திருமணங்களும் இல்ல வைபவங்களும் அங்கு கொண்டாடப்பட்டன.

கடந்த ஆண்டில் மூடப்பட்ட பல பிரபலமான உணவகங்களின் பட்டியலில் தற்போது இந்த உணவகமும் இணைக்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்