கன்ட்ரிசைட் ரோட்டிலும் லென்டோர் அவென்யூவிலும் வேகமாகப் பரவும் டெங்கிக் குழுமத்தை அடையாளம் கண்டிருப்பதாக தேசியச் சுற்றுப்புற வாரியம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தெரிவித்திருக்கிறது. அங்கு 135 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சென்ற மாதம் 28ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 4ஆம் தேதி வரை 131 டெங்கிச் சம்பவங்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டன. இது, அதற்கு முந்திய வாரத்தைவிட 12 அதிகம் என்று வாரியம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
திங்கட்கிழமை (ஜூலை 6) நிலவரப்படி, டெங்கிச் சம்பவங்கள் பதிவான குழுமங்களின் எண்ணிக்கை 17. அவற்றில் ஏழு இயோ சூ காங், சிலேத்தார்-சிராங்கூன் வட்டாரத்தில் அமைந்துள்ளன.
சுற்றுப்புற வாரிய இணையத்தளத்தின்படி, இவ்வாண்டில் 1,311 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
“வழக்கமாக இந்தப் பருவகாலத்தில் டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும். வெப்பமான சூழல் கொசுக்களின் இனப்பெருக்கச் சுழற்சியையும் டெங்கிக் கிருமிகளின் பெருக்கத்தையும் வேகப்படுத்துகிறது,” என்று வாரியம் தெரிவித்தது.
கன்ட்ரிசைட் ரோட்டிலும் லென்டோர் அவென்யூவிலும் டெங்கிச் சம்பவங்கள் பதிவான பகுதிகளில் வீட்டுப் பொருள்கள், பூந்தொட்டித் தட்டுகள், குப்பைத் தொட்டிகள் போன்றவற்றில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வாரியம் கூறியது.
இந்தப் பகுதிகளில் பலமுறை சோதனைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மொத்தத்தில், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் 86 பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 69 குடியிருப்பு வளாகங்கள், 15 பொது இடங்கள், இரண்டு கட்டுமானத் தளங்கள்.
“கொசு இனப்பெருக்கத்திற்குக் காரணமான வளாக உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
இந்தக் குழுமங்களிலும் சுற்றுப்பகுதிகளிலும் தீவிரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அது குறிப்பிட்டது.
குடியிருப்பு வளாகங்கள், பொது இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், புகையடித்தல் முதலியவை அவற்றுள் சில.
சமூகப் பங்காளித்துவ அமைப்புகளுடன் அணுக்கமாய்ப் பணியாற்றி வருவதாகவும் வாரியம் கூறியது. சமூக நிகழ்ச்சிகள், சமூக ஊடகங்கள் முதலியவற்றோடு நேரடியாக வீடுகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து டெங்கித் தடுப்புக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுவதாக அது சொன்னது.
கன்ட்ரிசைட் ரோடும் லென்டோர் அவென்யூவும் சிவப்பு வட்டாரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 10 அல்லது அதற்கும் மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள் பதிவாகும் பகுதி அவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.

