சிங்கப்பூரில் வழக்கமாக மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் டெங்கிப் பரவல் சம்பவங்கள் அதிகமாக இருக்கும்.
பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி வலியுறுத்தியுள்ளார்.
தெம்பனிஸ் வட்டார நூலகத்தில் சனிக்கிழமை (மே 16) நடைபெற்ற நிகழ்ச்சியில் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய டெங்கித் தடுப்பு இயக்கத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றினார் டாக்டர் ஜனில்.
பாதிப்பு குறைந்தாலும் நீடிக்கும் ஆபத்து
டெங்கிப் பரவல் குறித்துப் பேசிய அவர், தற்போது சிங்கப்பூரின் டெங்கி நிலைமை ஓரளவுக்குச் சீராக இருந்தாலும், நாம் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்று எச்சரித்தார்.
“மே முதல் அக்டோபர் வரை டெங்கிப் பரவல் அதிகம் இருக்கும் காலகட்டத்தில், சூடான வெப்பநிலை கொசுக்களின் இனப்பெருக்கச் சுழற்சியை வேகப்படுத்துகிறது. அதனால், டெங்கி கிருமி மிக விரைவாகப் பரவுகிறது.
“இதனால், டெங்கிப் பரவல் மேலும் விரைவாக அதிகரிக்கக்கூடும். டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை உயரும்வரை காத்திருக்காமல் நாம் முன்கூட்டியே செயல்பட வேண்டும்,” என்று மூத்த துணை அமைச்சர் ஜனில் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2024ஆம் ஆண்டில், உலகச் சுகாதார அமைப்பு உலகளவில் 14 மில்லியன் டெங்கிச் சம்பவங்களைப் பதிவு செய்ததாக அவர் சொன்னார். அது, அதற்கு முந்தைய ஆண்டில் பதிவான 6.5 மில்லியனைக் காட்டிலும் ஒரு மடங்கிற்கும் அதிகம். அப்போது, 11,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சிங்கப்பூரில், கடந்த 2022ஆம் ஆண்டில் 32,000க்கும் அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.
தொடர்புடைய செய்திகள்
‘‘தற்போது பருவநிலை மாற்றம் நிலவிவரும் வேளையில், அதிகரிக்கும் வெப்பநிலையும் கணிக்கமுடியாத மழைப்பொழிவும் டெங்கி போன்ற நோய்கள் பரவுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குகின்றன,” என்றார் டாக்டர் ஜனில்.
இதனால்தான், 2026, பருவநிலைத் தகவமைப்பை முன்னிறுத்தும் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தேங்கும் தண்ணீரை அகற்றுவது மிக முக்கியம்
ஏடிஸ் கொசு, அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், அதனால் ஏற்படும் டெங்கியின் விளைவுகள் சிறியவை அல்ல என்று மூத்த துணை அமைச்சர் சுட்டினார்.
அரசாங்கம் டெங்கியைக் கட்டுப்படுத்த ‘வோல்பாக்கியா திட்டத்தை’ 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வீடுகளுக்கு விரிவுபடுத்தவிருக்கிறது.
இருப்பினும், அது பாரம்பரியத் தடுப்பு முறைகளுக்குத் துணையாக இருக்குமே தவிர, அவற்றுக்கு மாற்றுத் திட்டமாக அமையாது என்று திரு ஜனில் கூறினார்.
‘‘தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதே கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுப்பதற்கு மிக நேரடியான, பயனுள்ள வழியாகும்.
‘‘தேசிய டெங்கித் தடுப்பு என்பது ஒரு பொதுச் சுகாதார இயக்கம் மட்டுமல்ல. அது நாம் எதிர்காலத் தலைமுறையினருக்குக் காட்டும் கடப்பாடும் ஆகும் என்று டாக்டர் ஜனில் கூறினார்.

