ஓய்வூதியரான 89 வயது முன்னாள் மனைவியிடம் வாழ்க்கைப் பராமரிப்புச் செலவைக் கோரி வழக்கு தொடர்ந்த 90 வயது முதியவரின் கோரிக்கையைச் சிங்கப்பூர் குடும்ப நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இருவருமே வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் இருப்பதையும், மணவிலக்குப் பிரிவினைச் சொத்தின் மூலம் கணவருக்குக் கணிசமான பங்கு கிடைப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
கடந்த 1960ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் 60 வயதைக் கடந்த மூன்று பிள்ளைகள் உள்ளனர். கிட்டத்தட்ட 64 ஆண்டு தம்பதியரான அவர்கள், 2024 செப்டம்பரில் மணவிலக்குப் பெற்றனர். அவர்களின் முதன்மைச் சொத்தான $5.8 மில்லியன் மதிப்புள்ள வீட்டை உள்ளடக்கிய குடும்பச் சொத்துகளைப் பிரிப்பது தொடர்பான வழக்கை நீதிபதி திதார் சிங் கில் விசாரித்தார்.
வழக்கின் முடிவில், குடும்பப் பராமரிப்பிலும் பிள்ளைகளின் வளர்ச்சியிலும் மனைவியின் பங்களிப்பே அதிகமாக இருந்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மொத்தச் சொத்தில் மனைவிக்கு 60 விழுக்காடு பங்காக $3.5 மில்லியனும், கணவருக்கு 40 விழுக்காடு பங்காக $2.4 மில்லியனும் ஒதுக்கீடு செய்தார்.
$2.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெறும் 90 வயது முதியவருக்கு அதுவே போதுமானது என்றும், மாத ஓய்வூதியத்தில் வாழும் முதிய மனைவியிடமிருந்து வாழ்க்கைப் பராமரிப்புச் செலவைப் பெறுவது நியாயமற்றது என்றும் தெரிவித்தார்.
தம்பதியரின் வீடு ஆறு மாதங்களுக்குள் விற்கப்பட்டுத் தொகை பகிரப்பட வேண்டும் என்றும், நிலுவையிலுள்ள சொத்து வரியை இருவரும் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
