வீடுகளுக்கு வழிவிடும் டெப்போ லேன் தொழிற்பேட்டை

2 mins read
7d5fbdde-920b-46c0-a469-33bbdc82e264
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தில் டெப்போ லேன் தொழிற்பேட்டை வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் மேராவில் உள்ள டெப்போ லேன் தொழிற்பேட்டையும் சில சேமிப்புக் கிடங்குகளும் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் அவ்விடத்திலிருந்து காலி செய்ய வேண்டும்.

அந்த இடத்தில் வீடுகள் கட்டப்படவுள்ளன.

தற்போது அந்த இடத்தை நிர்வாகம் செய்யும் ஜேடிசி கழகம், “அந்த இடத்தை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுக்கவுள்ளோம். அதனைக் குடியிருப்புப் பகுதியாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது,” என்று குறிப்பிட்டது.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தில் டெப்போ லேன் தொழிற்பேட்டை வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு 7.3 ஹெக்டர் அளவில் குடியிருப்புப் பகுதிகள் அமைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட அது 10 காற்பந்துத் திடல்களுக்குச் சமமான இடமாகும்.

டெப்போ லேன் தொழிற்பேட்டையில் எட்டு புளோக்குகளில் 240 கிடங்குகள் உள்ளன. அது 1970ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது.

அந்த இடத்தில் மீதமுள்ள ஆறு கிடங்குகள் சிங்கப்பூர் நில ஆணையத்திற்குச் சொந்தமானது.

இடத்தை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது குறித்து 2018ஆம் ஆண்டே வாடகைதாரர்களிடம் தெரிவித்துவிட்டதாக ஜேடிசி கூறியது.

மேலும், வாடகைதாரர்களுக்கு மாற்று இடங்கள் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

வாடகைதாரர்கள் பிடோக் ஃபுட் சிட்டி அல்லது ஜேடிசி ஸ்பேஸ்@அங் மோ கியோவில் இடமாற வசதிகள் செய்துதரப்பட்டது.

இந்நிலையில், அந்தத் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த சில உணவகங்களும் கடைகளும் தாங்கள் அந்த இடத்திலிருந்து கிளம்புவதாகச் சமூக ஊடகங்கள்வழி தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் தெரியப்படுத்தினர்.

பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் செயல்பட்டது பெருமையாக உள்ளது என்றும் புது இடத்திற்கு மாறுவது சற்று கடினமாக இருந்தாலும் அது புதிய அனுபவம் கொடுக்கும் என்றும் வாடகைதாரர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்