தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணைப் பிரதமர் ஹெங்: சிங்கப்பூர் - இந்திய உறவு பிற நாடுகளுக்கு வழிகாட்டலாம்

3 mins read
ad704c79-c648-45c1-b9c2-bd991b4e6983
ஃபுல்லர்டன் ஹோட்டலில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர்-இந்தியக் கருத்தரங்கில் உரையாற்றிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிக போட்டிமிக்க உலகச் சூழலில் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பதில் சிங்கப்பூர் - இந்தியாவின் நீடித்த உறவு, சிந்தனையில் ஒன்றுபட்ட மற்ற நாடுகளுக்கு வழிகாட்டும் சுடராகத் திகழலாம் என்று சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.

உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 60 விழுக்காட்டுப் பங்கை ஆசியா இவ்வாண்டுக்குள் அளிக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட திரு ஹெங், ஆசியாவின் வளர்ச்சி விகிதம், உலக வளர்ச்சியை விஞ்சலாம் என்ற அனைத்துலகப் பண நிதியத்தின் முன்னுரைப்பைச் சுட்டினார்.

முதன்முதலாக நடத்தப்பட்ட ‘த நெக்ஸ்ட் பேஸ்’ எனும் சிங்கப்பூர் - இந்தியக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோது திரு ஹெங் அவ்வாறு கூறினார்.

தெற்காசிய ஆய்வு நிலையம், சிங்கப்பூர் - இந்திய பங்காளித்துவ அறக்கட்டளை, சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் ஆகியவை இணைந்து ஃபுல்லர்டன் ஹோட்டலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5ஆம் தேதி) நடத்திய இந்தக் கருத்தரங்கில் 280க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

கலந்துகொண்டோரில் வர்த்தகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

பல நூற்றாண்டுகளாக நீண்டு வரும் சிங்கப்பூர்-இந்திய உறவின் ஆழத்தை தம் உரையில் சுட்டிய துணைப் பிரதமர் ஹெங், 1965ல் சிங்கப்பூர் பெற்ற சுதந்திரத்தையும் 1991ல் இந்தியா மேற்கொண்ட பொருளியல் மிதவாதப் போக்கு ஆகியவற்றை நினைவுகூர்ந்தார்.

“சிங்கப்பூரின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து 15 நாள்களில் அந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டது,” என்றார் திரு ஹெங்.

முன்னாள் பிரதமர் கோ சோக் டோங் தலைமையில் சிங்கப்பூர், இந்தியாவின் கிழக்கு நோக்கிய பார்வை எனும் கொள்கையை ஆதரித்ததைத் திரு ஹெங் சுட்டினார். சிங்கப்பூரின் பொருளியலுக்கான இரண்டு இறக்கைகளாக சீனாவையும் இந்தியாவையும் திரு கோ கருதியதாகவும் திரு ஹெங் தம் உரையில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் - இந்திய கூட்டுறவுகளின் அடுத்த கட்டத்தைப் பற்றி பேசிய திரு ஹெங், இரண்டு நாடுகளும் எவ்வாறு அவற்றைச் செதுக்கி நல்ல தாக்கங்களை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்து மூன்று யோசனைகளைப் பகிர்ந்தார்.

“முதலில் பொருளியல் வளர்ச்சி என்பது எப்போது தொடரக்கூடிய பணியாக இருக்கும். அதற்கு முடிவு இல்லை. காலப்போக்கில் அது மேலும் சிக்கலாகும்,” என்று துணைப்பிரதமர் ஹெங் கூறினார்.

“மூலதனம், யோசனைகள், திறனாளர்கள் ஆகியவற்றை அதிகபட்சம் பயன்படுத்தி வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கு சிங்கப்பூர், இந்தியா, ஆசியாவிலுள்ள மற்ற பகுதிகள் ஆகியவை சேர்ந்து பொருளியல் இணைப்புகளையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தவேண்டும்,” என்று அவர் கூறினார்.

மேலும், 2005ல் கையெழுத்தான ‘சீக்கா’ எனப்படும் முழுமையான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு ஒப்­பந்தத்­தைத் பற்றிக் குறிப்பிட்ட திரு ஹெங், அந்த ஒப்பந்தத்தால் இரு நாட்டுப் பொருளியல் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

2005ல் 20 பில்லியன் வெள்ளியாக இருந்த இருநாட்டு உறவின் வர்த்தக மதிப்பு, 2022ல் 51.2 பில்லியனாக வளர்ந்தது.

2022ல் இந்தியாவின் ஆகப் பெரும் வெளிநாட்டு முதலீட்டாளராக சிங்கப்பூர் உள்ளது.

ஆசியா, வட்டார அளவில் ஒட்டுமொத்தமாக ஆசியா தனது வளர்ச்சியையும் புதிய வாய்ப்புகளையும் முடுக்கிவிட அது சரியான திறன்களை வளர்க்கவேண்டும் என்று திரு ஹெங் கூறினார்.

“இந்நிலையில், சிங்கப்பூரின் அடுத்தக்கட்ட பங்காளித்துவத்தில் தொழில்நுட்பம் முடிவான பலத்தைத் தரும்,” என்றார் திரு ஹெங்.

சிக்கலான வளர்ச்சிப் பாதையில் சென்று தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி, புரிதலை ஆழப்படுத்தி நம்பிக்கையை வலுப்படுத்துவது முக்கியம் என்று திரு ஹெங் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்