துணைப் பிரதமர் கான் கிம் யோங் இம்மாதப் பிற்பாதியில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
அமெரிக்க அரசாங்க அமைச்சர்களைச் சந்திக்கவிருக்கும் திரு கான், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை ஆராய வர்த்தகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
“அமெரிக்காவின் அக்கறைகள், முன்னுரிமைகள், விருப்பங்கள் ஆகியவற்றை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதோடு சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் பயனளித்துவரும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயவும் இந்தப் பயணம் உதவும்,” என்றார் திரு கான்.
சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழு நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் திரு கான் பேசினார்.
பயணத்துக்கான விவரங்கள் இன்னும் திட்டமிடப்படுவதாகச் சொன்ன திரு கான், அமெரிக்கப் பயணத்தின்போது மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்றார்.
மருத்துவப் பொருள்கள்மீது அமெரிக்கா விதிக்க முற்படும் வரிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மருத்துவப் பொருள்கள் குறித்து சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகத்தை வலுத்தப்படுத்தும் வழிகளை ஆராயப்போவதாகத் திரு கான் குறிப்பிட்டார்.
மருத்துவப் பொருள்மீது வரி விதிப்பது தொடர்பில் சிங்கப்பூர் ஏற்கெனவே அமெரிக்காவின் வர்த்தக அமைச்சுடன் பேசிவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது அம்சமாக இருதரப்புப் பொருளியல் உறவை வலுப்படுத்துவதற்கான வழிகள் ஆராயப்படும் என்றார் திரு கான். முதலீடு, வர்த்தகம் ஆகியவற்றோடு இருநாட்டுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றியும் திரு கான் கலந்துபேசவிருக்கிறார்.
மூன்றாவதாக தனியார் துறையைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்களையும் கல்விமான்களையும் திரு கான் சந்திக்கவிருக்கிறார்.
“அமெரிக்காவில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், நவீன உற்பத்தி போன்ற பல துறைகளில் உள்ள வாய்ப்புகளைச் சிங்கப்பூரில் உள்ள வர்த்தகங்கள் ஆராயலாம்,” என்றார் அவர்.
சிங்கப்பூரும் அமெரிக்காவின் பகுதிமின்கடத்தி குறித்து இதுவரை எந்தக் கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று திரு கான் குறிப்பிட்டார்.
“இது குறித்து யோசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அமெரிக்க வர்த்தக அமைச்சுடன் மருத்துவப் பொருள்கள் குறித்த முடிவை எட்டிய பிறகு பகுதிமின்கடத்திகள் குறித்து பேச ஆரம்பிக்கலாம்,” என்றார் திரு கான்.