சிங்கப்பூரின் மலாய், முஸ்லிம் சமூகத்தினருடன் இணைந்து அவர்களது வளர்ச்சியை மேம்படுத்த விரும்புவதாக உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
“மலாய், முஸ்லிம் சமுதாயத்தினரின் விருப்பங்களுக்குச் செவிசாய்த்து அடுத்த 10,15 ஆண்டுகளுக்கு அவர்களது வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த திட்டம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளேன்,” என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.
ஹஜ்ஜுப் பெருநாளன்று சனிக்கிழமை (ஜூன் 7) காலை ஈசூன் வட்டாரத்திலுள்ள டாருல் மக்முர் பள்ளிவாசலில் காலைத் தொழுகையில் கலந்துகொண்ட பேராசிரியர் ஃபைஷால், முதல் தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நீ சூன் குழுத்தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக 14 ஆண்டுகள் செயல்பட்ட பேராசிரியர் ஃபைஷால், தற்போது மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் அங்கம் வகிக்கிறார்.
அவருடன், தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகமும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சையது ஹருன் அல்ஹப்ஷியும் பள்ளிவாசலுக்கு வருகையளித்தனர்.
கிட்டத்தட்ட $15 மில்லியன் செலவில் ஈராண்டுகளுக்கு நீடித்த மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு தாருல் மக்மூர் பள்ளிவாசல், புதுப்பொலிவு பெற்ற நிலையில் பள்ளிவாசல் அன்பர்களை வரவேற்றது.
ஆடு போன்ற கால்நடைகளின் இறைச்சியை இறையாளர்களுக்கும் வசதி குறைந்தோருக்கும் விநியோகிப்பது குர்பான் சடங்கிற்குரிய வழக்கமாகும்.
சிங்கப்பூரிலுள்ள ஏறத்தாழ 53 பள்ளிவாசல்கள், குர்பான் கடமையை வெளிநாடுகளில் நிறைவேற்றுவதற்கான ஏற்பாட்டைத் தங்கள் அன்பர்களுக்குச் செய்திருப்பதாக ‘சலாம்எஸ்ஜி’ குர்பான் உதவிக் குழு அண்மையில் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இதன் தொடர்பில் வெளிநாட்டுக் கால்நடைகளுக்கு 5,700 முன்பதிவுகளை ‘சலாம்எஸ்ஜி’ பெற்றிருந்ததாக பேராசிரியர் ஃபைஷால் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டைவிட கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகம்.
“ஆட்டிறைச்சி, காஸாவுக்கும் விநியோகிக்கப்படும். உலகெங்கிலும் தேவைப்படுவோர்க்கு உதவ நம் சமுதாயம் முன்வருவதை இது எடுத்துக் காட்டுகிறது,” என்றார் ஃபேராசிரியர் பைஷால்.
புனித மெக்கா நகரில் தற்போது நடைபெற்று வரும் ஹஜ்ஜு புனிதப் பயணத்தைப் பற்றியும் பேசிய பேராசிரியர் ஃபைஷால், புனித யாத்திரை மேற்கொண்டு வரும் சிங்கப்பூரர்கள் நலமாக இருப்பதாகவும் முக்கியமான சடங்குகளில் சிலவற்றில் அவர்கள் நல்ல முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.