சிங்கப்பூரை முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவதில் மசெகவினர் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு: டெஸ்மண்ட் லீ

2 mins read
a9bcd562-b111-4076-a27f-1f14830ce939
மக்கள் செயல் கட்சியின் மாநாட்டு அரங்கில் உரையாற்றிய கட்சித் தலைவரும் கல்வி அமைச்சருமான டெஸ்மண்ட் லீ, இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் இரவு பகல் பாராமல் கட்சிக்காகச் செயலாற்றிய மசெகவினருக்கு நன்றி தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரை முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்துவதில் மக்கள் செயல் கட்சியினர் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்று கூறினார் அக்கட்சியின் தலைவரும் கல்வி அமைச்சருமான டெஸ்மண்ட் லீ.

சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான அவர், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) காலை தொடங்கிய மக்கள் செயல் கட்சியின் (மசெக) மாநாட்டு அரங்கில் ஆற்றிய உரையில், ‘‘மாறிவரும் உலகில் வாழ்ந்துவந்தாலும் மசெக புதுப்பிக்கப்பட்ட, ஆயத்தமாக உள்ள புதிய அணி,’’ என்று தெரிவித்தார். உறுதியான நம்பிக்கையுடன், பணிவுடன் சேவை செய்யப் புதிய தீர்மானத்துடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம் என்றும் கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட மசெகவின் 38வது மத்தியச் செயற்குழு உறுப்பினர்களுடன், கட்சி உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த மாநாட்டில் உரையாற்றிய திரு லீ, இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரவு பகல் பாராமல் கட்சிக்காகச் செயலாற்றிய மசெகவினருக்கு நன்றி தெரிவித்தார்.

‘‘பாதையில் சவால்கள் வந்தபோதும், திட்டங்கள் மாறியபோதும் நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள். அடிமட்ட அளவில், களத்தில் கட்சியைப் பிரதிநிதித்து, மக்களின் அக்கறைகளில் கவனம் செலுத்தி, செயலில் இறங்கினீர்கள். இதன்மூலம் நம் விழுமியங்கள் மேலும் வலுப்பட்டன,’’ என்றார் அவர்.

அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட்டை அடுத்து, இந்த ஆண்டு மே மாதம் அக்கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட திரு லீ, ‘‘ஒவ்வொரு தலைமுறையினரும் கட்சியை மதிப்பீடு செய்கின்றனர்,” என்றார். 

“ஆனால் நம் கடந்தகாலத்தையோ நாம் அளிக்கும் வாக்குறுதிகளை வைத்தோ அல்ல; மாறாக நாம் எப்படிச் செயல்புரிகிறோம், எவ்வாறு செவிமடுக்கிறோம், சிங்கப்பூரர்கள் மீது எவ்வகையில் அக்கறை கொள்கிறோம் என்பனவற்றின் அடிப்படையில் அவர்கள் மதிப்பிடுகின்றனர்,’’ என்றும் அவர் விளக்கினார்.

வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் கூடுதல் உத்தரவாதம், மேம்பட்ட வாய்ப்புகளை வழங்கிட வேண்டும் என்பதில் ஆளுங் கட்சியான மசெக உறுதியாக உள்ளது என்றார் அவர்.

ஒவ்வோர் ஊழியரின் மேம்பாட்டையும் உறுதிசெய்யும் அதேவேளையில், போட்டித்தன்மைமிக்கதாகத் திகழும் வகையில் ஆற்றல்மிக்க பொருளியலைக் கட்டியெழுப்புவதும் முக்கியம் என்றும் மசெகவினரை வலியுறுத்தினார் திரு லீ.

எதிர்வரும் நாள்கள் எளிதாக இருக்கப்போவதில்லை என்றாலும், ஒரே கட்சியாக, ஒரே மக்களாகத் தொடர்ந்து செயல்பட்டால், வருங்காலத்தில் சிங்கப்பூரின் சிறப்பான நாள்களைக் காண இயலும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்