தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை (பிடிஓ) கட்டுப்படியான விலையில் விற்க, அவற்றின் விலையை அவற்றைக் கட்டுவதற்காக ஏற்படும் செலவுடன் இணைக்கும்படி சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி பரிந்துரை செய்தது.
அவ்வாறு செய்தால் அது சிங்கப்பூரைப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெள்ளிக்கிழமை (மார்ச் 7) தெரிவித்தார்.
முன்பு வீடுகள் வெறும் தங்குமிடங்களாகக் கருதப்பட்டன என்றும் அவற்றைத் தங்கள் சொத்தாக மக்கள் கருதவில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே, கட்டுமானச் செலவுகளை வீட்டு விலையுடன் இணைத்தால் அதே நிலை ஏற்படும் என்றார் அவர்.
“சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தினால் பிடிஓ வீடுகள் வெறும் தங்குமிடங்களாகவும் வாழ்க்கையில் ஏற்படும் செலவுகளில் ஒன்றாகவும் எடுத்துக்கொள்ளப்படும். ஓய்வுக்காலத்தில் பலனளிக்கக்கூடிய சொத்தாக அவை கருதப்படாது,” என்றார் திரு லீ.
இதைத்தான் சிங்கப்பூரர்கள் விரும்புகிறார்களா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இன்று பிடிஓ வீடுகளின் விலை சந்தை மதிப்பைப் பொறுத்திருக்கிறது எனக் குறிப்பிட்ட அமைச்சர் லீ, வீடு அமைந்துள்ள இடம், அதன் பரப்பளவு ஆகியவை விலையை நிர்ணயிப்பதாகக் கூறினார்.
அதுமட்டுமல்லாது, வீடுகளைக் கட்டுப்படியான விலையில் வைத்திருக்க கழிவு விலையில் அவற்றை வீவக விற்கிறது என்றும் வீடு வாங்குவோருக்கு மானியமும் வழங்கப்படுவதை அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
லாப நோக்கத்துடன் பிடிஓ வீடுகள் விற்கப்படுவதில்லை என்றும் அதே போல நில, கட்டுமான செலவுகளை மீட்க அவற்றின் விலை நிர்ணயிக்கப்படுவதில்லை என்றார் அமைச்சர் லீ.

