சிங்கப்பூரில் உலகளாவிய, வட்டாரத் தலைமையகங்களை அமைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. ஆயினும், பிற சந்தைகளைவிட இங்கு அதிக ஊழியர்களை அவை பணியமர்த்துவதில்லை.
அதிகாரத்துவப் புள்ளிவிவரங்களின்படி, வெளிநாட்டுத் தலைமையகங்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 770ஆக இருந்தது.
அது 2024ஆம் ஆண்டில் 1,030ஆக அதிகரித்தது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்கையில் ஏறக்குறைய 34 விழுக்காடு அதிகரித்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அதே காலகட்டத்தில், அவற்றில் பணிபுரியும் உள்ளூர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் எண்ணிக்கை எட்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உயர்ந்தது.
2019ஆம் ஆண்டு 12,700ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 13,700ஆக அதிகரித்தது.
குறைந்த ஊழியர்களைக் கொண்டு முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையங்களாகவே வட்டாரத் தலைமையகங்கள் தற்போது செயல்படுவதாக டிஎம்எஃப் குழுமத்தின் பேட்ரிக் நா கூறினார்.
மலேசியா, பிலிப்பீன்ஸ் போன்ற அண்டைச் சந்தைகளைவிடச் சிங்கப்பூர்த் தலைமையகங்களில் குறைவான ஊழியர்களே உள்ளதாக ‘விவோஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ரே டே தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மனிதவளச் செலவினங்கள் மெதுவாக உயர்ந்து வருவதும் கொவிட்-19க்குப் பிறகுத் தொலைநிலை வேலைமுறை பரவலானதும் இதற்குக் காரணங்கள் என்றார் அவர்.
இருப்பினும், சிங்கப்பூரின் செயல்திறன், நடுநிலைத்தன்மை, பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் அனைத்துலகத் தலைமையக விருது போன்ற வரிச்சலுகைகளால் நிறுவனங்கள் இங்கு தலைமையகங்களை அமைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரெஞ்சு அழகுசாதன நிறுவனமான கிளாரின்ஸ், ஜப்பானிய மெய்ஜி பார்மா ஆசியா, செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்க நிறுவனமான பிளாட், பகுதிமின்கடத்தித் துறை சார்ந்த யுனிவர்சல் வேப்பர் ஜெட் கார்ப்பரேஷன் ஆகியவை சிங்கப்பூரைத் தங்கள் உத்திபூர்வ மையமாகக் கொண்டுள்ளன.
பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க அறிவியல், தொழில்நுட்ப அடித்தளம், உலகளாவிய இணைப்பு ஆகியவற்றைச் சிங்கப்பூர் வலுப்படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆசிய நிறுவனங்கள் உலகளவில் விரிவடைய சிங்கப்பூரைப் பயன்படுத்துவதாகவும் திரு டே குறிப்பிட்டார். அதேசமயம், பிரிட்டிஷ் மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்மித்+நெஃப்யூ, தலைமையகம் எனப் பெயரிடாமலேயே முக்கியப் பணிகளைச் சிங்கப்பூரில் நிலைநிறுத்தியுள்ளது.
இதனால், சிங்கப்பூரில் ஊழியர் எண்ணிக்கையைவிட உத்திபூர்வ முக்கியத்துவமே மேலோங்கியுள்ளது.
