ஏகே தியேட்டர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதிகமானோர் இணைந்து பங்குகொண்ட தேவராட்ட நடனம் சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இந்தியர்கள் 160 பேர் ஒன்றுகூடி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) சிராங்கூன் சமூக மன்றத்தில் இந்தத் தேவராட்டத்தைப் படைத்தனர்.
“தேவராட்டம் என்பது ஒரு பாரம்பரிய நடனம். மன்னர்கள் போரில் வெற்றிபெற்று நாடு திரும்பும்போது இந்நடனம் ஆடப்படும். அனைவரும் சேர்ந்து கடவுளுக்கு நன்றிகூறும் வகையில் ஆடப்படுவது என்றும் தேவர்கள் ஆடும் ஆட்டம் தேவராட்டம் என்றும் சொல்லப்படுகிறது.
“சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாட ‘ஏகே தியேட்டர்’ குழுவினருடன் பொதுமக்களையும் ஈடுபடுத்தி இச்சாதனையைப் படைக்கிறோம்,” என்றார் ‘ஏகே தியேட்டர்’, ‘ஏகேடி கிரியேஷன்ஸ்’ நிறுவனங்களின் இயக்குநர் திருவாட்டி ராணி கண்ணா.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிவப்பு, வெள்ளை உடைகளில் வந்திருந்தனர். கைகளில் சிவப்பு, பச்சைத் துணிகளை ஏந்தி அழகிய ஐந்து நிமிட நடனத்தைப் படைத்தனர். இந்தியாவிலிருந்து வந்த 29 ஆண்டுகால அனுபவம் பெற்ற நடன ஆசான் நெல்லை மணிகண்டன் நடனப் பயிற்சியை வழங்கினார்.
“தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் தேவராட்டத்தைக் காணலாம். தொடக்கத்தில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் இந்நடனத்தை ஆடினர். கிட்டத்தட்ட 1985ல் மற்ற சமூகத்தினருக்கும் அதைக் கற்பித்தனர்,” என்றார் ஆசான் மணிகண்டன்.
“சென்ற ஆண்டு ஜூன் மாதம் ‘ஏகே தியேட்டரிலிருந்து’ சிலர் சென்னைக்கு வந்து என்னிடம் தேவராட்டம் கற்றனர். நான் உறுமி தாளத்தைப் பதிவுசெய்து அனுப்பினேன். அதை வைத்து அவர்கள் பயிற்சிசெய்து காணொளிகள் அனுப்பினர். மூன்று நாள்களாகச் சிங்கப்பூரில் நேரில் பயிற்சி வழங்கிவருகிறேன்,” என்றார் அவர்.
அடித்தள ஆலோசகர் சான் ஹுய் யு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
60 வயதுக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா தினகரன் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார்.
அமரர் ஆனந்த கண்ணனை நினைவுகூரும் நடனம்
சிங்கப்பூரின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரமான அமரர் ஆனந்த கண்ணனின் நினைவு நாளில் (ஆகஸ்ட் 16) அவரை நினைவுகூரும் வகையில் இச்சாதனையை அவர் தொடங்கிய நிறுவனமே புரிந்துள்ளது என்றார் ஆனந்த கண்ணனின் மனைவி ராணி கண்ணா.
இதற்குமுன், திரு ஆனந்த கண்ணனின் பிறந்தநாளன்று (மார்ச் 23) ஜிக்காட்டம் ஆடிய ஆகப் பெரிய குழு எனச் சாதனை படைத்தது ‘ஏகே தியேட்டர்’. 2022ல் ஒயிலாட்டத்துக்காகவும் நற்பணிப் பேரவையுடன் இணைந்து அது சிங்கப்பூர்ச் சாதனையைப் படைத்தது.
“இந்த இசையும் நடனமும் எங்கள் உடலுக்கும் மனத்துக்கும் புத்துணர்ச்சி தருவதாக உள்ளது. ஆசிரியராக இருந்தபோது என் மாணவர்களுக்குக் கிராமியக் கலையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதனால் இந்நிகழ்ச்சி எனக்கு மனமகிழ்ச்சியளித்தது,” என்றார் தன் மகள், பேரன்கள் இருவருடன் நடனத்தில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்புலட்சுமி, 67.