புதுடெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிடப்பட்ட அதிகாரபூர்வத் தகவல்கள் இதனைத் தெரிவித்தன.
அசாம் மாநிலத்தில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கினால் பல கிராமங்கள் தத்தளிக்கின்றன.
அந்த மாநிலத்தில் மட்டும் கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு 97 பேர் பலியானதுடன், கிட்டத்தட்ட 1,70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வீடுகளையும் விளைநிலங்களையும் மூழ்கடித்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
பாரிஸ் நகரத்தின் பரப்பளவைப் போல சுமார் ஒன்றரை மடங்கு பெரிய நிலப்பரப்பான, 14,000 ஹெக்டருக்கும் அதிகமான விளைநிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சிவசாகர் மாவட்டம் முழுவதும் பாதியளவு நீரில் மூழ்கிய வீடுகள், வேரோடு சாய்ந்த மரங்கள் மற்றும் சேற்றில் புதைந்த வாகனங்களை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் நேரில் கண்டார்.
வெள்ளநீரில் இருந்து தமது வளர்ப்பு நாயைக் காப்பாற்ற முயன்ற போது உயிரிழந்த 13 வயது சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் காணொளி ஒன்றை அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) பதிவேற்றினார்.
“எந்தவொரு பெற்றாரும் தங்கள் குழந்தைக்கு இறுதிவிடை கொடுக்கும் நிலை வரக்கூடாது,” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்தியாவின் சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா கடந்த வியாழக்கிழமை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார்.
வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் பழைய நிலைக்குத் திரும்ப பல காலம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாகவும் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
அசாம் மாநிலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவதும் இந்தியாவின் மாபெரும் நதியான பிரம்மபுத்ரா நிரம்பி வழிவதும் ஒவ்வோர் ஆண்டும் நிகழக்கூடியவை.


