வாகனங்களின் பதிவெண்களை மாற்றும் சாதனத்தைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) எச்சரித்திருக்கிறது.
வாகனங்களை ஓட்டுவோர் சட்டவிரோதச் சாதனத்தைத் தொலைவிலிருந்து கருவியின் மூலம் இயக்கி வாகனப் பதிவெண்ணை மறைக்கவோ மாற்றவோ முடியும். சட்ட அமலாக்கக் கட்டமைப்புகளிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வது குற்றம் என்று ஆணையம் தெரிவித்தது. அத்தகைய சாதனங்கள் பற்றி அறிந்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தது. போலி வாகனப் பதிவெண்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆணையம் குறிப்பிட்டது.
“சிங்கப்பூரில் அத்தகைய சம்பவம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அது தெரிவித்தது. அத்தகைய குற்றத்தைப் புரிவோருக்கு அதிகபட்சம் $5,000 அபராதமோ 12 மாதம்வரை சிறைத்தண்டனையோ விதிக்கப்படக்கூடும்.
வாகனப் பதிவெண் மாற்றும் சாதனங்களை லஸாடா போன்ற இணைய வர்த்தகத்தளங்கள் $48 முதல் $145 வரை விற்பது செப்டம்பர் 16ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்துக்குத் தெரியவந்தது.
செப்டம்பர் 22ஆம் தேதி மீண்டும் இணையத்தளத்தை ஊடகம் பார்வையிட்டபோது பட்டியலிலிருந்து சில சாதனங்கள் அகற்றப்பட்டிருந்தன. மேல் விவரம் பெறுவதற்காக லஸாடாவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.
மலேசியா, வாகனப் பதிவெண்களை மாற்றும் சட்டவிரோதச் சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று கடந்த வாரம் எச்சரித்திருந்தது.
விதிமுறைகளை மீறுவோர்மீது சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய போக்குவரத்துப் புலனாய்வு, அமலாக்கப் பிரிவு இயக்குநர் முஹமது யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.
“வாகனத்தில் அத்தகைய சட்டவிரோதச் சாதனங்களைப் பொருத்தியோரை அடையாளங்காண அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் தி ஸ்டார் ஊடகத்திடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோதச் சாதனங்களின் விற்பனை குறித்து உள்நாட்டு வர்த்தக, செலவின, மின்னிலக்க அமைச்சுகளுடன் காவல்துறை பேச்சு நடத்தும் என்றும் அவர் சொன்னார்.