தைப்பூசம் 2026: பதிவு முடிந்ததால் பக்தர்கள் ஏமாற்றம்

3 mins read
8b45a888-d4e2-4945-bec4-a2307ad18785
நேர்த்திக்கடனுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதால், இன்னும் பதிவுசெய்யாத பக்தர்கள் தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடும் பிற கோயில்களில் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் - கோப்புப்படம்: தமிழ் முரசு

பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளின்ன்போது ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இந்நிலையில், நேர்த்திக்கடனுக்காக முன்பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை பாதுகாப்பாக நிர்வகிக்கக்கூடிய வரம்பை எட்டிவிட்டதாக அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், இந்து அறக்கட்டளை வாரியம் ஆகியவை ஒரு கூட்டறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளன.

அதனால், இன்னும் பதிவுசெய்யாத பக்தர்கள், தைப்பூசத் திருநாளன்று பிற கோயில்களில் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுவதோடு, மக்களிடமிருந்து எதிர்மறையான கருத்துகளும் எழுந்துள்ளன.

இதையொட்டி தமிழ்முரசிடம் பேசிய சிலர் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

“தைப்பூசம் ஞாயிற்றுக்கிழமை வருவது புதிதன்று. கூட்ட நெரிசலைக் குறைக்க இவ்வாண்டு புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பின்னர் ஏன் இப்படியானது? பலரும் வேலைக்குச் செல்வதால் அவர்களின் நேரத்திற்குத் தகுந்தவாறுதான் பதிவுசெய்ய முடியும். இது நியாயமற்றதாக உள்ளது,” என்றார் இல்லத்தரசி செ. ரத்தினம், 56.

தைப்பூச விழாவிற்குப் பதிவுசெய்வதில் பால்குடம் எடுக்கும் பக்தர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என நினைத்திருந்தார் கடந்த 25 ஆண்டுகளாகப் பால்குடம் எடுத்துவரும் சரவணன் விஜயகுமார், 43.

ஆனால், இந்த ஆண்டு பதிவுசெய்ய முடியாமல் போனதால் திரு சரவணன், புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் பால்குடம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

“இதுவரையிலும் பதிவுசெய்வதில் எந்தச் சிரமத்தையும் நான் எதிர்நோக்கியதில்லை. இந்த ஆண்டு இவ்வாறு நடந்தது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. பக்தர்கள் தைப்பூசத் திருநாளைக் கொண்டாடும் பிற கோயில்களில் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று நிர்வாகம் கூறுவது நியாமற்றது,” என்று திரு சரவணன் ஆதங்கப்பட்டார்.

இம்முறை தம் சகோதரர் காவடி எடுக்கவிருப்பதாகக் கூறிய திரு மோஹன் ராஜ் ராமசாமி, 27, அதற்குத் தாங்கள் பதிவுசெய்துவிட்டாலும் பலர் பதிவுசெய்ய முடியாமல் தவிப்பதாகச் சொன்னார்.

“கூட்டறிக்கையில் எந்தப் புள்ளிவிவரமும் இல்லை. இந்நிலையில், கோயிலுக்குள் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க மறுப்பதை ஏற்றுக்கொள்ளக் கடினமாக உள்ளது. ஃபேஸ்புக்கில் உள்ள காவடிக் குழுக்களில் பலர் பால்குடச் சீட்டுகள் தேவை என்று கேட்டுக்கொள்வதோடு, யாரேனும் தங்கள் சீட்டுகளை விட்டுக்கொடுக்க முடியுமா என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்,” என்று குமுறினார் மோஹன்.

இந்த நடவடிக்கை அதிகாரிகளால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடா என்பது குறித்த தெளிவான விளக்கத்தையும், அடுத்த தைப்பூசத்திலாவது இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படும் என்பதையும் நிர்வாகம் தெரிவித்தால் அது சமூகத்தினரால் பெரிதும் வரவேற்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

“தைப்பூசத்திற்கான பதிவிடங்கள் இவ்வளவு விரைவில் வரம்பை எட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. நல்ல வேளையாக நான் முன்கூட்டியே பதிவுசெய்துவிட்டதால் என்னால் காவடி எடுக்க முடிகிறது,” என்றார் ஹீரன் கோபால், 32.

காவடி எடுக்கத் திட்டமிட்டிருந்த தம் நண்பர் அதற்குப் பதிவுசெய்ய முடியாமல் போனதால் வேறொரு கோயிலில் அவர் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற இருப்பதாகக் குறிப்பிட்டார் தினேஷ் குமார், 40.

“20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் காவடி எடுத்து வருகிறேன். பிற்பகல் நேரத்தில் காவடி எடுக்கப் பதிவுசெய்யத் திட்டமிட்டிருந்தபோது இணையத்தளத்தில் 30 நிமிடங்களுக்குள் முன்பதிவு முடிந்துவிட்டது,” என்று அவர் சொன்னார்.

இதுகுறித்துக் கருத்தறிய தமிழ் முரசு, இந்து அறக்கட்டளை வாரியத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்