பக்திப் பரவசம் பொங்கிய தீமிதித் திருவிழா

பக்திப் பரவசம் பொங்கிய தீமிதித் திருவிழா

2 mins read
2664bed6-b63f-4dc5-8cb9-08b398a2f651
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கிட்டத்தட்ட 3,800 பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) மாலை பூக்குழி இறங்கி தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். - படம்: த. கவி
Google News Preferred Icon

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கிட்டத்தட்ட 3,800 பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) மாலை பூக்குழி இறங்கி தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பார்வையாளர்களுடன் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும், சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங்கும் தீமிதித் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்புச் சேர்த்தார்.

தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, கரகம் சுமந்து பக்தர்கள் பின்தொடர, பெருமாள் கோயிலிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து மாரியம்மன் கோயிலை மாலை 6.15 மணி அளவில் சென்றடைந்தார்.

கோயிலின் முகப்பில் நாயன நாதத்திற்கும் தவிலின் தாளத்திற்கும் கரகம் ஆடி, மாலை 6.25 மணிவாக்கில் பூக்குழி இறங்கினார். அவரைத் தொடர்ந்து வரிசையாக ஆண்கள் பூக்குழி இறங்கினர்.

தீமிதி முடிந்ததும், தொண்டூழியர்கள் உட்பட 725 பெண்கள் பூக்குழியை வலம் வந்தனர்.

காலையில் மழை மேகங்கள் எட்டிப் பார்த்தபோதும் அசராமல் ஏறத்தாழ 50 தொண்டூழியர்கள் பூக்குழியை உருவாக்கும் பணிகளில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஈடுபட்டனர். 18 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட பூக்குழி ஞாயிற்றுக்கிழமை காலையில் எரியூட்டத் தொடங்கப்பட்டது.

பூக்குழிக்காக 22,000 காட்டு வேம்பு விறகுகள் வரவழைக்கப்பட்டன.

பெருமாள் கோயிலிலும் மாரியம்மன் கோயிலிலும் ஞாயிறு அன்று கிட்டத்தட்ட 10,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தீமிதித் திருவிழாவுக்கு முன்னதாக அக்டோபர் மாதத் தொடக்கத்திலிருந்து ஏறத்தாழ 4,000 பேர் பால்குடம் சுமந்தனர். 800 பேர் அங்கப் பிரதட்சணம் செய்தனர்.

“தீமிதித் திருவிழா இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் பலரும் இறையுணர்வோடு கலந்துகொள்வதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தொண்டூழியர்கள் அனைவரது உதவிக்கரமும் இல்லாமல் இந்த ஏற்பாடுகள் சுமுகமாக நடந்திருக்க முடியாது. பூக்குழி மிகச் சிறப்பாகத் உருவாக்கப்பட்டது,” என்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் செயலாளர் அண்ணாமலை சரவணன் சொன்னார்.

“கடந்த 25 ஆண்டுகளாக நண்பர்களின் தூண்டுதலினால் தீமிதித்து வருகிறேன். நல்லபடியாக தீமிதியில் கலந்துகொண்டது மனநிறைவாக உள்ளது. எனது மகனும் என்னுடன் பூக்குழி இறங்கினார். நாங்கள் இருவரும் ஒன்றாகத் தீமித்ததில் கலந்துகொண்டதில் பெரும் மகிழ்ச்சி,” என்றார் திரு கிருஷ்ணன், 63.

தீமிதித் திருவிழா தொடர்பான படங்களையும் காணொளிகளையும் காண தமிழ் முரசு சமூக ஊடகத் தளங்களை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்