தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டிற்கு அருகிலேயே நீரிழிவு தொடர்பான பரிசோதனைகள்

2 mins read
182b7dce-3262-4ab6-adcb-f585f5613ac3
சமூக மன்றங்கள், துடிப்புமிக்க மூத்தோர் நிலையங்கள், குடியிருப்பாளர் நிலையங்கள் ஆகியவற்றில் பாதப் பரிசோதனைகளையும் விழித்திரைப் பரிசோதனைகளையும் பெற என்எச்ஜி ஹெல்த் வகைசெய்துள்ளது. - படம்: சாவ் பாவ்

நீரிழிவை முன்கூட்டியே கண்டறியவும் நீரிழிவு தொடர்பான சிக்கல்களைச் சமாளிக்கவும் என்எச்ஜி ஹெல்த் (NHG Health, முன்னதாக தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம்) 2023ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிங்கப்பூரின் வடக்கு, மத்தியப் பகுதிகளில் வசிக்கும் நீரிழிவு நோயாளிகள் வீட்டிற்கு அருகில் உள்ள சமூக மன்றங்கள், துடிப்புமிக்க மூத்தோர் நிலையங்கள், குடியிருப்பாளர் நிலையங்கள் ஆகியவற்றில் பாதப் பரிசோதனைகளையும் விழித்திரைப் புகைப்பட சேவைகளையும் பெற என்எச்ஜி ஹெல்த் வகைசெய்துள்ளது.

கடந்த 2023 நவம்பரில் தொடங்கிய திட்டத்தின்மூலம் கிட்டத்தட்ட 770 நோயாளிகள் 12 பரிசோதனைத் தளங்களுக்குச் செல்லும்படி கூறப்பட்டதாக என்எச்ஜி ஹெல்த்தின் மக்கள்தொகை சுகாதார வளாகத்தின் அடிப்படைப் பராமரிப்பு அலுவலக இயக்குநர் டாக்டர் கிறிஸ்டஃபர் சோங் கூறினார்.

என்எச்ஜி ஹெல்த்தின் மத்திய-வடக்கு அடிப்படைப் பராமரிப்புக் கட்டமைப்பின்கீழ் உள்ள 92 தனியார் மருந்தகங்களுக்கு அருகில் பரிசோதனைத் தளங்கள் அமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“சமூகத் தளங்கள் நோயாளிகள் வீட்டிற்கு அருகில் இருப்பதால் அவர்கள் எளிதில் அங்குச் செல்ல முடியும்,” என்றார் டாக்டர் சோங்.

அத்தகைய பரிசோதனைத் தளங்களில் கால் தொடர்பான சிக்கல்களுக்கு ஆளாகும் நோயாளிகள் நீரிழிவு பாதப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம். நீரிழிவு உள்ளோர் ஒவ்வோர் ஆண்டும் பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டும் என்று டாக்டர் சோங் அறிவுறுத்தினார்.

சிங்கப்பூரில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டுக்கு நீரிழிவு முக்கியக் காரணங்களில் ஒன்று என்றார் அவர். நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 33.9 விழுக்காட்டினர் நீரிழிவு விழித்திரை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய நால்வர் நீரிழிவுக் காயங்களால் முட்டிக்குக் கீழ் உள்ள கால்பகுதியை இழக்கின்றனர். அந்த விகிதத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 1,500 பேர் முட்டிக்குக் கீழ் உள்ள தங்களது கால்பகுதியை இழக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்