சிங்கப்பூருடன் வைர விழா கொண்டாடுவோர்

3 mins read
46774cf4-777b-456f-8161-5e6b1ce79f85
இவ்வாண்டு தன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய திருவாட்டி கேலிஸ்தா (நடுவில்), அவருடன் தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையைக் காணவந்த தோழிகள் மோனிகா, மார்கரட். - படம்: ரவி சிங்காரம்

இவ்வாண்டு தன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருவாட்டி கேலிஸ்தா,தன் 21வது வயது வரை குடியுரிமையற்றவராக இருந்தார்.

“நான் பிறந்தது ஜனவரியில்; கோலாலம்பூரில் பிறந்தேன். அப்போது மலாயாவிலிருந்து சிங்கப்பூர் இன்னும் பிரியவில்லை; ஆனால் பிரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் குழப்பம் நிலவியது. இதனால் எனக்குக் குடியுரிமைக் கிடைக்கவில்லை,” என்றார் திருவாட்டி கேலிஸ்தா.

கேலிஸ்தா சிங்கப்பூரில்தான் வளர்ந்தார். “என் தந்தை சிங்கப்பூரர் என்பதால் நான் படித்தது, வளர்ந்தது அனைத்தும் சிங்கப்பூரில்தான்.

“நான் விசா எடுத்து மலேசியாவுக்கு அவ்வப்போது செல்வேன். என் பாட்டியைக் காண என் பெற்றோர் என்னை கோலாலம்பூருக்கு அழைத்துச் செல்வார்கள். ஆனால், கடப்பிதழ் இல்லாததால் மற்றபடி சிங்கப்பூரில்தான் இருந்தேன். அப்போதெல்லாம் வெளிநாடு செல்வதற்குக் குடும்பத்தில் இப்போதுள்ள வசதிகளும் இல்லை,” என்றார் அவர்.

திருவாட்டி கேலிஸ்தா, தன் 21வது வயதில் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றார். “சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றது குறித்து எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. சரியான முடிவுதான் என இன்றுவரை கூறுவேன்,” என்றார்.

“என் குடும்பம், வீடு, வேலை அனைத்தும் சிங்கப்பூரில்தான் இருந்தன. வளங்களே இல்லாமல் மக்களின் உழைப்பால் மட்டுமே சிங்கப்பூர் இந்நிலைக்கு உயர்ந்துள்ளது. என்ன வேறுபாடு என்றால், மக்கள்தொகை முன்பு இருந்ததைவிட இப்போது அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றது சரியான முடிவுதான் என இன்றுவரை கூறுவேன்.
கேலிஸ்தா, 60

“சிங்கப்பூருடன் இணைந்து 60வது பிறந்தநாளைக் கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாண்டு எனக்கு மிகவும் அர்த்தமுள்ள பிறந்தநாள்,” என்றார் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் பணியிலுள்ள திருவாட்டி கேலிஸ்தா.

இவ்வாண்டு அவருடைய வைர விழா பிறந்தநாள் தனிச்சிறப்புடன் நடந்தேறியது. “என் நண்பர்கள், உறவினர்களை எல்லாம் அழைத்து என் பிள்ளைகள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார்கள். பெருமகிழ்ச்சியடைந்தேன்,” என்றார் அவர்.

நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டில் பிறந்தது அளவுக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு ஏதும் இணையில்லை என்றார் அவர்.

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் ஒத்திகைக்கான நுழைவுச்சீட்டுகள் கிடைத்தது திருவாட்டி கேலிஸ்தா, தன் நண்பர்கள் மோனிகா, மார்கரட் இருவருடன் அதற்குச் சென்றிருந்தார். அதற்காக, ‘சிங்கப்பூர்: 1965’ என அச்சிடப்பட்ட சட்டையை அவர் அணிந்திருந்தார்.

பேரனுடன் அணிவகுப்பு

திருவாட்டி கேலிஸ்தாபோல் சிங்கப்பூருடன் இணைந்து வைர விழாவைக் கொண்டாடும் மற்றொருவர், தேசிய தின அணிவகுப்பைக் காணவந்த திருவாட்டி மி‌ஷெல் திலகா.

பெல்ஜியத்திலிருந்து வந்த பேரன் ஈதனுடன், இவ்வாண்டு ஜூலையில் தன் 60 வயதுப் பிறந்தநாளைக் கொண்டாடிய திருவாட்டி திலகா.
பெல்ஜியத்திலிருந்து வந்த பேரன் ஈதனுடன், இவ்வாண்டு ஜூலையில் தன் 60 வயதுப் பிறந்தநாளைக் கொண்டாடிய திருவாட்டி திலகா. - படங்கள்: ரவி சிங்காரம்

பெல்ஜியத்திலிருந்து சிங்கப்பூர் வந்த தன் ஒன்பது வயதுப் பேரன் ஈதனை தேசிய தின அணிவகுப்புக்கு அவர் அழைத்து வந்திருந்தார்.

“என் மகனின் திருமணம் இம்மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. அதனால்தான் மகளின் மகன் ஈதன் இங்கு வந்துள்ளார்.

“அவரும் தேசிய தின அணிவகுப்பைக் காண வேண்டும்; சிங்கப்பூரின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவரை அழைத்து வந்துள்ளேன்,” என்றார் திருவாட்டி திலகா.

சென்ற ஜூலையில்தான் திருவாட்டி திலகா தன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

“பொதுவாக, நான் என் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. திருமணத்துக்கு முன்புகூட நான் சாதாரணமாகத்தான் கொண்டாடுவேன். ஆனால், இம்முறை நான் எதிர்பார்க்காத வகையில் என் பிள்ளைகள் என் 60வது பிறந்தநாளுக்காக செய்த ஏற்பாடுகளைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்; மகிழ்ந்தேன்,” என்றார் அவர்.

“என் தங்கை என்னிடம் கூறினார் - பார்த்தாயா, உன் 60வது பிறந்தநாளில் நீ சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுப் பிறந்தநாளைக் காண்கிறாய்!” என்றார் அவர்.

சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்ற களிப்பை அவர் கண்களில், புன்னகையிலேயே கண்கூடாகக் காணமுடிந்தது.

“இதற்கு முன் நான் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபோதுதான் தேசிய தின அணிவகுப்புக்கு வந்திருக்கிறேன். அப்போது எனக்கு 15 வயது. நான் கடற்படையில் இருந்ததால் 1988 தேசிய தின அணிவகுப்பில் அணிவகுத்து நடந்தேன்,” என்றார் அவர்.

“என் பேரனுக்கு ராணுவப் படை, ஆகாயப்படை, கடற்படைக் காட்சிகள் மிகவும் பிடித்திருந்தன,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் 60 ஆண்டுப் பயணத்தில் நீங்கா நினைவுகள் பல தனக்குப் இருப்பதாக அவர் கூறினார்.

“யோ யோ, யே யே (கயிற்றைத் தாண்டிக் குதிக்கும் விளையாட்டு), போலா ஹந்தம் (அக்காலத்தில் பிரபல பந்து விளையாட்டு) விளையாடினோம். போ செர்ரி, குவாவா, நெல்லிக்காய் மரங்களில் ஏறிப் பழங்கள் பறித்தோம்,” என்றார் அவர்.

அந்தக் காலம் கடந்துவிட்டது என்றாலும் நவீன உலகிலும் சிங்கப்பூர் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து செல்வதைக் காண்பதில் அவருக்கு மகிழ்ச்சியே.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசிய தின அணிவகுப்பின் குரலாகத் திகழும் திரு வில்லியம் சேவியர், தன் பிறந்தநாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி சிங்கப்பூருடன் இணைந்து கொண்டாடியது மற்றொரு சிறப்பம்சம்.

குறிப்புச் சொற்கள்