இஸ்லாமியச் சட்டத்துக்கு எதிராக போதிக்கவில்லை: ஆடவர் மறுப்பு

1 mins read
103cda26-d166-4999-8223-a1f7873bad8c
குற்றம் சுமத்தப்பட்ட முகம்மது ரஸிஃப் ராடி, 67. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இஸ்லாமியச் சட்டங்களுக்கு முரணான கோட்பாடுகளை போதித்ததாகத் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆடவர் ஒருவர் மறுத்துள்ளார்.

சமய வகுப்புகளைத் தாம் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் உடற்பிடிப்பு நிபுணரான முகம்மது ரஸிஃப் ராடி, 67, எனப்படும் அந்த சிங்கப்பூரர் மீது தொடரப்பட்ட வழக்கின் எட்டாவது நாள் விசாரணை திங்கட்கிழமை (நவம்பர் 4) நடைபெற்றது.

நீதிபதி ஷைஃபுதீன் சருவான் முன்னிலையில் தம் தரப்பு வாதத்தை எடுத்துரைத்த அந்த ஆடவர், சூதாட்டம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஆன்மிகத் திருமணம் செல்லத்தக்கது என்றும் போதித்ததாகத் தம்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதைத் தாம் அறிந்துள்ளதாக அவர் கூறினார்.

நபிகள் நாயகம் அல்லது அவர் வழிவந்தவரின் ஆவியைத் தம்மால் வரவழைக்க முடியும் என்று சொன்னதாகவும் தம்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதையும் தாம் அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆயினும், அதுபோன்று தாம் போதிக்கவில்லை என்றும் இஸ்லாமியப் பண்புகளைத் தாம் மதிப்பதாகவும் ரஸிஃப் தெரிவித்தார்.

முன்னதாக அரசுத்தரப்பு சாட்சியங்கள் குறிப்பிட்டதுபோல சமய வகுப்புகள் எதனையும் தாம் நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

“நண்பர்களாக ஒன்றுகூடினோம். அந்தச் சந்திப்புகள் வகுப்புகள் அல்ல. எதுவும் நடக்கவில்லை. சாப்பிட்டோம்; எங்களது குடும்ப விஷயங்களையும் தொழில் பற்றியும் பேசினோம்.

“முஸ்லிம்களாக யோசனைகளைப் பகிர்ந்துகொண்டோம்; வெளிப்படையாக விவாதித்தோம்,” என்று நீதிமன்றத்தில் ரஸிஃப் குறிப்பிட்டார்.

நீதிமன்ற விசாரணை தொடருகிறது.

குறிப்புச் சொற்கள்