விருப்பங்களையும் தேவைகளையும் வேறுபடுத்துவது: மனித நிலை குறித்து முஃப்தி

விருப்பங்களையும் தேவைகளையும் வேறுபடுத்துவது: மனித நிலை குறித்து முஃப்தி

2 mins read
நோன்பும் சுயக்கட்டுப்பாடும் மனித நிலைக்கு உதவுகின்றன
e02adaee-a04c-478c-8263-b87ed4afa237
பாதுகாப்பு குறைந்துவரும் உலகில் மரியாதை, மாண்பு, பரிவு ஆகிய குணங்களைக் காண்பது நாளடைவில் அரிதாகி வருவதாக சிங்கப்பூரின் முஃப்தி நசிருதீன் முகம்மது நசிர் குறிப்பிட்டார். - படம்: பெரித்தா ஹரியான்

உலகியல் சார்ந்த உணர்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டாலும், உள்ளத்திலும் ஆன்மாவிலும் உள்ள நற்பண்புகளே மெய்யான மனிதாபிமானம் என்ன என்பதைக் காட்டுவதாகச் சிங்கப்பூர் முஃப்தி நசிருதீன் முகம்மது நசிர் கூறியுள்ளார்.

கதிஜா பள்ளிவாசலில் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், பசி, தாகம் போன்ற உடல்வழி உணர்வுகள், மனிதர்கள் ஆசையால் எவ்வாறு திசைதிருப்பப்படுகின்றனர் என்ற பெரும்பாடத்தை உணர்த்துவதாகக் கூறினார்.

நோன்பைக் கடைப்பிடிக்கும் சிலர், வெறும் வயிற்றுடன் பல்வேறு உணவு வகைகளைப் பற்றி எண்ணினாலும், நோன்பு துறப்பு என்பது உண்மையில் கட்டுப்பாட்டுடன் செய்யப்படுவதாக அவர் கூறினார்.

நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பல சமயத் தலைவர்கள்
நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பல சமயத் தலைவர்கள் - படம்: பெரித்தா ஹரியான்

“பெரும்பாலும், நமது உடலின் தேவைக்கு மேல் நாம் உட்கொள்வதில்லை,” என்றும் அவர் கூறினார்.

புலன்சார் விருப்பங்களில் ஒருவர் அதிகம் மூழ்கினால் உடல் பாழாவது மட்டுமில்லாமல் ஆன்மாவும் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

பாதுகாப்பு குறைந்துவரும் உலகில் மரியாதை, மாண்பு, பரிவு ஆகிய குணங்களைக் காண்பது நாளடைவில் அரிதாகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாத்தில் மாண்புக்குரிய இமாம் அலியின் கூற்றை முஃப்தி நினைவுபடுத்தினார்.

“நீங்கள் இல்லாதபோது உங்களுக்காக மக்கள் உண்மையிலேயே ஏங்க வைக்கும் விதமாக வாழுங்கள். நீங்கள் இந்தப் பூவுலகிலிருந்து மரித்தாலும், அவர்கள் இறைவனின் கருணைக்கான தங்கள் பிரார்த்தனையில் உங்களையும் நினைவில்கொள்வர்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் நான்காவது முஃப்தியாக 2020ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் டாக்டர் நசிருதீன், சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்திலும் அங்கம் வகிக்கிறார்.

நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் ‘ஐஆர்ஓ’ எனப்படும் பலசமய அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம், கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், முன்னாள் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் ஆகியோர் நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

சிங்கப்பூர் முஃப்தியின் உரைகள் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் குறித்து மேலும் அறிய, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) அதிகாரத்துவத் தளத்தைப் பார்வையிடலாம்.

குறிப்புச் சொற்கள்